கழிவுநீருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு: வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

Published On:

| By admin

ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் சிந்தன் நகரில் பாதாள சாக்கடை கழிவுநீருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போலீஸாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு, கருங்கல்பாளையம் சிந்தன் நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை கழிவுநீருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்துள்ளனர். எனினும் பாதாள சாக்கடை கழிவுநீருந்து நிலையம் அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் கைவிடவில்லை.

ADVERTISEMENT

ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இங்கு பணிகள் மேற்கொள்ள வந்த மாநகராட்சி அதிகாரிகளை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து பணி செய்ய விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் பாதாள சாக்கடை கழிவுநீருந்து நிலையம் அமைப்பதற்கு குழிகள் தோண்டுவதற்காக நேற்று காலை மீண்டும் மாநகராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. அப்போது மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர்கள் செல்வராஜ், மாலதி ஆகியோரும் உடன் வந்தனர். இதையறிந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு ஒன்று திரண்டனர். அவர்கள் பாதாள சாக்கடை கழிவுநீருந்து நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெயமுருகன், நிர்மலா உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பணிகள் செய்ய விடாமல் தடுக்க சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, “எங்கள் பகுதியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பள்ளிக்கூடங்கள், கோயில்கள் உள்ளன. இங்கு கழிவுநீருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக எங்களிடம் எந்த ஒரு கருத்தும் இதுவரை கேட்கவில்லை. முறையாக நோட்டீஸும் வழங்கவில்லை. இங்கு கழிவுநீருந்து நிலையம் அமைத்தால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். மேலும் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு, நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே கழிவுநீருந்து நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும்” என்று அந்தப் பகுதி பொதுமக்கள் கூறினர்.

ADVERTISEMENT

எனினும் போலீஸார் பாதுகாப்புடன் மாநகராட்சி பணியாளர்கள் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து அங்கு திரண்டவர்கள் வேறுவழியின்றி ஒவ்வொருவராக அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிந்தன் நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

**-ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share