மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில், கடந்த நான்கு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் கொடுக்கப்பட்டதாலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையாலும் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி பொது மக்கள் குளிக்க அனுமதி மறுக்கபட்டுள்ளது. மேலும் பண்டிகை காலம் என்பதால் பொது மக்கள் பார்வைக்கு மட்டும் திறக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.
