இலாகாவை மாற்றிய முதல்வர்: பிடிஆர் ரியாக்‌ஷன்!

Published On:

| By christopher

கடந்த இரண்டு ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்காகவும், தற்பொழுது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கியதற்காகவும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

புதிய அமைச்சராக டி.ஆர்.பி. ராஜா பதவியேற்ற நிலையில் தமிழக அமைச்சரவையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி டி.ஆர்.பி.ராஜவுக்கு தொழிற்துறையும், அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மைத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறையும், மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கூடுதலாக தமிழ் வளர்ச்சித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் நிதித்துறையில் இருந்து தகவல் தொழில்நுட்பத்துறைக்கு அமைச்சராக மாற்றப்பட்டுள்ள பி.டி.ஆர். முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து இன்று (மே 11) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ”கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையின் கீழ் பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட்டையும்(2021 – ’22), பெருந்தொற்றுக்குப் பிறகு இரண்டு ஆண்டு பட்ஜெட்டுகளையும் (2022 – 23, 2023 – 24) சமர்ப்பித்துள்ளேன்.

ADVERTISEMENT

முந்தைய ஆட்சியின் விளைவாக உட்சபட்ச பற்றாக்குறை மற்றும் கடன் விகிதங்களைப் பெற்றிருந்த போதிலும், நாங்கள் வரலாறு காணாத வகையில் சமூக நலத் திட்டங்களிலும், மூலதனச் செலவினங்களிலும் முதலீடு செய்துள்ளோம். இதனை என் பொது வாழ்விலும், என் வாழ்க்கையிலும் மிகச் சிறப்பான பகுதியாகக் கருதுகிறேன்.

நிதி ஆதாரங்களை வலுப்படுத்துதல் மற்றும் சமூக நல செலவினங்கள் ஆகியவை சமத்துவ சமுதாயத்திற்கு அவசியமான படிகள் என்றாலும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உந்து சக்தியாக விளங்குவது முதலீடுகள், நிறுவன விரிவாக்கம் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கம் ஆகியவைகளே ஆகும்.

உலகளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நம்பர் ஒன் துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப இலாக்காவை முதல்வர்  ஸ்டாலின் எனக்குத் தற்போது வழங்கியதற்கு நான் நன்றியுள்ளவனாவேன்.

தொழில்நுட்பமே எதிர்காலத்தை வடிவமைக்கிறது என்பதை நாம் அறிவோம். தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு இத்துறையில் முன்னோடியாக இருந்தபோதிலும், கெடுவாய்ப்பாக கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் நமது உண்மையான செயல் திறனை எட்டுவதில் நாம் பின்தங்கிவிட்டோம்.

எனவே எனக்கு முன்னாள் இத்துறையை நிருவகித்த மனோ தங்கராஜ் மேற்கொண்ட பெருமுயற்சிகளின் தொடர்ச்சியாக இத்துறையில் கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தை விரைவுபடுத்துவதற்கும், தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகத்தை மீண்டும் ஒரு முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முன்னோடியான உலகளாவிய திறன் மையத்தை நிறுவி நிருவகித்ததன் மூலம் நான் பெற்ற சொந்த அனுபவமும், எனது தொழில் வாழ்வில் பெற்ற IT & ITES தொழில்துறையுடனான தொடர்புகளும் இந்த அமைச்சகப் பொறுப்பில் நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பயனளிக்கும் என நம்புகிறேன்.

இன்று பொறுப்பேற்கும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெற்றிகரமாகச் செயல்பட்டு மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். அவர் தனது பதவிக்காலத்தில் ஏற்கனவே நாம் எட்டியுள்ள முன்னேற்றங்களை மேலும் விரைவுபடுத்தி புதிய சாதனைகளைப் படைப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்காகவும், தற்பொழுது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள என் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்: யார் யாருக்கு என்ன இலாகா?

அமைச்சராக பதவியேற்ற மகன்: ஆசையை தெரிவித்த டி.ஆர்.பாலு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share