அன்னிக்கே துரைமுருகன் கேட்டார்… ஓப்பனாக ஃபீல் பண்ணிய பிடிஆர்

Published On:

| By Aara

தகவல் தொழில் நுட்பத் துறை கடுமையான நிதித் தட்டுப்பாட்டில் இருப்பதால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என்று முன்னாள் நிதியமைச்சரும், தற்போதைய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சருமான பிடிஆர் இன்று  (மார்ச் 25) சட்டமன்றத்தில் போட்டு உடைத்துள்ளார். PTR Open Talk on the Finance crisis

இன்றைய சட்டமன்றத்தின் கேள்வி நேரத்தில் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், அக்கட்சி சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி ஒரு கேள்வியைக் கேட்டார்.

“இப்போதைய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் நிதியமைச்சராக இருந்தபோது ஓசூர் மாநகரை அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படும்படி ஹைடெக் சிட்டி என்ற திட்டத்தை அறிவித்தார்.  தகவல் தொழில் நுட்பத் துறை சார்பில் இளைஞர்களுக்கு உயர் நுட்ப வேலை வாய்ப்புகளை உருவாக்கிட தமிழ்நாடு மின்னணு  நிறுவனம் மூலம் திறன் மிகு மையம் என்று உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்கள். சென்னையோடு நின்றுவிடாமல் ஓசூர், சூளகிரிக்கும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பிடிஆர்.,

“ஏற்கனவே அறிவித்த திட்டம் என்ன ஆச்சு என்று கேட்கிறார். காலம் மாற மாற சில சூழ்நிலைகள் நீடிக்கும் சிலது மாறும். நீர்வளத் துறை அமைச்சர் ஒரு முறை என்னிடம் அவையில், ‘இப்ப தியாகுவுக்கு தெரியுதா.. நிதி எங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு’னு  என்று கேட்டார்.

நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கையிலே சுமார்  10,000 கோடி அளவுக்கு திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார். நான் நிதியமைச்சராக இருந்தபோதும் அதேபோல் செய்தார்.

ஆனால், ஐ.டி. துறைக்கு அன்றைக்கும் சுமார் 200 கோடிதான் ஒதுக்கப்பட்டது. இன்றைக்கு  சுமார் 130 கோடி-  150 கோடிதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. PTR Open Talk on the Finance crisis

என்ன மாறியிருக்கிறது என்றால்… அன்றைக்கு இந்த துறையின் நிதி இந்த துறையால் சரியாக பயன்படுத்தப்பட்டு,  துறைக்கு வர வேண்டிய நிதி எல்லாம் சரியான நேரத்தில் வந்து செயல்பாட்டுக்கு எந்த தடையும் இல்லாமல் இருந்தது.

இன்றைக்கு இருக்கிற சூழ்நிலை அரசாங்கத்துக்கு எந்த அளவுக்கு நிதி நிலைமை கொஞ்சம் தட்டுப்பாடாக இருக்கிறதோ,  இந்த துறையினுடைய நிதிநிலை அதோடு மிகவும் தட்டுப்பாடாக இருக்கிறது. நாங்கள் நிறுவனங்களுக்கு மானியம் கொடுக்க வேண்டிய நிதியும் எங்களுக்கு வந்து சேரவில்லை. இருக்கிற நிதியையும் பல தடைகளோடு தான் செயல்படுத்த முடியும் என்ற சூழ்நிலை இருக்கிறது. ஏற்கனவே அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதி தடையாக இருக்கிறது. எனவே நிதி நிலை இந்த துறையில் என்றைக்கு சிறப்பாகுதோ  அப்போது இந்த அறிவிப்புகள் எல்லாம் நிறைவேற்றப்படும்” என்று கூறினார் அமைச்சர் பிடிஆர்.

”ஒரு காலத்தில் அனைத்து துறைக்கும் கறாராக நிதி ஒதுக்கி, அமைச்சர்களை புலம்ப வைத்தார் பிடிஆர். இன்று தன் துறைக்கு நிதி இல்லை என்று ஃபீல் பண்றாரு… இதான் காலத்தின் கோலம்” என திமுக சட்டமன்ற உறுப்பினர்களே பேசிக் கொண்டனர். PTR Open Talk on the Finance crisis

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share