அதிகாரப் பகிர்வு என்ற காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தொடர்ந்து பேசிவருவது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து ராகுல் காந்தியை இந்த பிரச்சனையில் தலையிடுமாறு திமுக வலியுறுத்த இருக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழு அமைத்தது காங்கிரஸ் மேலிடம். இந்த ஐவர் குழு, ஸ்டாலினை சந்தித்து பேசியது. அப்போதே, ‘அதிகாரப் பகிர்வு’ என்ற நிபந்தனையை ஸ்டாலினிடம் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் முன்வைத்தார்.
அதேநேரத்தில் காங்கிரஸின் அகில இந்திய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசினார். அத்துடன் தொடர்ந்தும் விஜய்க்கு ஆதரவாகவே பிரவீன் சக்கரவர்த்தி பேசிவருகிறார்.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை, காங்கிரஸ் தொண்டர்கள் கோரிக்கை அதிக சீட், ஆட்சியில் பங்கு , அதிகாரத்தில் பங்கு என்பதுதான்.. விஜயை சந்தித்து பேசக் கூடாதா? விஜய் கூட்டத்திற்கு மக்கள் உற்சாகமாக வருகின்றனர். அது வெளிப்படையாக தெரிகிறது எனவும் புகழ்ந்து பேசியிருந்தார்.
இப்படி பிரவீன் சக்கரவர்த்தி பேசிவருவதால், அவர் மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். இதற்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடையே அறிக்கை போர் உருவானது.
மேலும், அதிகாரப் பகிர்வு கருத்தை மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். இதுவும் சர்ச்சையானது. காங்கிரஸ் கட்சியின் இந்த தொடர்ச்சியான குடைச்சல்களால் கொந்தளித்து போயிருக்கும் திமுகவினர், சமூக வலைதளங்களில் காங்கிரஸுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். காங்கிரஸ் வெளியே போகட்டும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் இந்த மோதலை முதல்வர் ஸ்டாலின் விரும்பவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியினருக்கு கடிவாளம் போடுவதற்கு ராகுல் காந்தி தலையிட வேண்டும் என நினைக்கிறது திமுக தலைமை. இது தொடர்பாக ராகுல் காந்தியை திமுக தரப்பில் மூத்த தலைவர்கள் சந்தித்து பேசவும் இருக்கின்றனர் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
