தமிழ்நாட்டில் திட்டமிட்ட அரசியல் சதியை ஏற்படுத்த ஆளுநர் ஆர்என் ரவி முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “ஆளுநரின் நடவடிக்கைகள் தமிழக அரசின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணாக உள்ளன. அண்மைக்காலமாக அவர் பங்கேற்கிற பொது நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசி வருகிறார்.
குறிப்பாக தமிழகம், தமிழ்நாடு என்பதை விவாதத்திற்கு உட்படுத்தியிருக்கிறார். இந்தநிலையில் சட்டப்பேரவையில் அவர் நடந்து கொண்டவிதம் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது.
ஆளுநரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டே ஆளுநர் உரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அவை மரபுகளுக்கு மாறாக, அரசியல் சட்டப்பூர்வமான கடமைகளுக்கு மாறாக சிலவற்றை தவிர்த்தும் சிலவற்றை சேர்த்தும் வாசித்திருக்கிறார்.
குறிப்பாக திராவிட மாடல் என்ற சொல்லை பயன்படுத்த அவர் விரும்பவில்லை. பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் போன்றவர்களின் பெயர்களை உச்சரிக்காமல் தவிர்த்திருக்கிறார்.
தமிழ்நாடு அமைதிப் பூங்கா, சமூக நீதி, சமத்துவம், மகளிர் மேம்பாடு போன்ற சொற்களை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார். இது ஒரு தவறான முன்னுதாரணம்.
இதற்கு முன் இப்படி நிகழ்ந்ததில்லை. மாநில அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் ஒரு இடைவெளியை ஏற்படுத்த ஆளுநர் முயற்சிக்கிறார்.
இதன்மூலம் திட்டமிட்ட அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த ஆளுநர் முயற்சிக்கிறார். இது திட்டமிட்ட அரசியல் சதி என்றே விடுதலை சிறுத்தைகள் கருதுகிறது.

முதல்வர் தன் எதிர்ப்பை பதிவு செய்தது அவை மரபுக்கு மாறானது என்றாலும் கூட, தேசியகீதம் இசைப்பதற்கு முன்பே ஆளுநர் எழுந்து சென்றது எந்தவகையிலும் நியாயப்படுத்த இயலாது.
தேசிய அடையாளங்கள் எவையாக இருந்தாலும் அதை மதிக்கவேண்டியது அவரது கடமை. திமுக அரசுக்கு எதிராக மட்டுமில்லை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு எதிராக காய் நகர்த்துகிறார்கள்.
சமூக நீதி அரசியலுக்கான அடிமடியில் கை வைக்கிறார். இனி ஒரு நொடியும் அவர் ஆளுநராக நீடிக்கக்கூடாது. அப்படி நீடித்தால் தமிழக அரசு சுயமாக முடிவு எடுக்க முடியாது.
எனவே ஒன்றிய அரசு அவரைத் திரும்ப பெற வலியுறுத்தி விசிக சார்பில் ஜனவரி 13 ஆம் தேதி மாலை சைதைப் பகுதியில் இருந்து ஆளுநர் மாளிகை வரை பேரணியாகச் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.
எனவே ஜனநாயக சக்திகள் இந்த அறப்போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கிறோம்” என்றார்.
ஆளுநர் தமிழ்நாடு என்றுதானே குறிப்பிட்டு இருக்கிறார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “இது வரவேற்கத்தக்க ஒன்று என்றாலும், மக்களை கவர்வதற்காக அந்த மாநில மொழியில் பேசுவது ஆர்எஸ்எஸ்காரர்களின் சூழ்ச்சிகளில் ஒன்று.
இது அரசியல் செயல் திட்டமாகத்தான் பார்க்க முடியுமே தவிர மக்கள் உணர்வுக்கு மதிப்பளிப்பதாக கருத முடியாது” என்றார்.
ஆளுநரிடம் முறையாக ஒப்புதல் வாங்காமல் உரை தயாரிக்கப்பட்டதாக வானதி சீனிவாசன் கூறியிருக்கிறாரே என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, “இது ஆளுநரையே கொச்சைப்படுத்தும்விதமாக இருக்கிறது. ஒப்புதல் இல்லாமல் எப்படி அவர் சட்டசபைக்கு வந்து உரையை வாசித்தார்.
திராவிட மாடல், 10 சதவீத இட ஒதுக்கீடு போன்றவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார்கள். இவர் தமிழ்நாட்டு ஆளுநரா, ஆர்எஸ்எஸ் தலைவரா?. மாநில அரசின் நிலைப்பாட்டை தவிர்த்துவிட்டு பேசுவதற்கு ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது.
அம்பேத்கர், பெரியார் பெயரை தவிர்த்துவிட்டு படிப்பதில் அவருக்கு என்ன கூச்சம்? மக்களால் போற்றப்பட்ட தலைவர்களை பின்பற்றும் அரசை தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
அந்த தலைவர்களின் பெயரையே சொல்லத் தயங்கும் ஆளுநரால் இந்த அரசோடு எப்படி இணக்கமாக செயல்படமுடியும்” என்றார்.
அவை மரபை முதல்வரும் மீறிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறதே என்ற கேள்விக்கு, ஆளுநர் நடந்து கொண்ட போக்கின் எதிர்வினைதான் முதல்வர் நடந்துகொண்டது என்று திருமாவளவன் பதிலளித்தார்.
கூட்டணி கட்சிகளை தூண்டிவிட்டு திமுக வேடிக்கை பார்ப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்து பேசிய திருமாவளவன், “விளம்பரத்திற்காக அவர் எதையாவது பேசுவார். கூட்டணிக் கட்சிகளை தூண்டிவிட்டு பேசும் அளவுக்கு யாரும் உணர்ச்சி இல்லாதவர்களா? என்ன” என்று கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சர் மரபை மீறி செயல்படுவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளதே என்று கேள்வி எழுப்பியபோது, அதிமுக நாளுக்கு நாள் தேய்மானத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மக்களின் நன்மதிப்பை இழந்து வருகிறார்கள்.
அவர்கள் ஆர்எஸ்எஸ்சின் பி டீமைப் போல நடந்து கொள்கிறார்கள் என்று கூறினார். மேலும் ஆளுநரை திரும்பப் பெறும் வரை ஜனநாயக சக்திகளின் போராட்டம் தொடரும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கலை.ரா
“பெண் சிக்கியது தெரிந்தே காரை ஓட்டினோம்”- டெல்லி குற்றவாளிகள் வாக்குமூலம்!
