எஸ்.வி.ராஜதுரை
கூவம் நதிக்கரைக்குப் போக வேண்டாம். அங்கிருந்து பல மீட்டர் தொலைவில் காரில் பயணம் செய்பவர்கள்கூட மூக்கைப் பொத்திக் கொள்ள செய்யும் ஆறு அது. சென்னை நகரையும் அதில் வசிக்கின்ற பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்வையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ செழுமைப்படுத்தியுள்ள உழைக்கும் மக்கள் (மிகப் பெரும்பாலோர் தலித்துகள்) – தங்கள் மூக்குகளை எங்கோ கழற்றி வைத்துவிட்டு வாழ்கின்ற குடிசைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் – இதுவரை இந்தியாவின் எந்த இடத்திலும் நடந்திராத வடிவத்தில் கடந்த 9ஆம் தேதியன்று போராட்டமொன்றை நடத்தினர்.
சத்யவாணிமுத்து நகரைச் சேர்ந்த சில ஆண்களும் ஒரு பெண்மணியும், இலட்சக்கணக்கானோரின் கழிவுகளைச் சுமந்துவரும் அந்தப் பெரும் சாக்கடைத் தண்ணீர் கழுத்துவரை எட்டியிருக்க அதில் மணிக்கணக்கில் நின்றிருந்தனர்.
இந்தக் காட்சி நெஞ்சில் ஈரப்பசையுள்ள ஒவ்வொருவரையும் கண் கலங்கவைத்துக் கொண்டிருந்த அதேவேளை ஈவிரக்கமற்ற அரசாங்கத்தின் அதிகாரிகள் போலீசாரைக் கொண்டு அந்த அபலைகளின் தகரக் குடிசைகளை இடித்துத் தள்ளிக் கொண்டிருந்தனர்.
சிபிஎம், விசிக தொண்டர்கள், திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் ஆகியோர் நேரடியாகத் தலையிட்டு எதிர்ப்புக் குரலை எழுப்பியதால் சில குடிசைகள் தப்பித்தன. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்கூட ‘ட்வீட்டரில்’ கண்டனம் தெரிவித்திருந்தார்.
கூவம், அடையாறு, பங்கிங்ஹாம் கால்வாய் கரையோரங்களிலுள்ள குடிசைப் பகுதிகளை அகற்றி சிங்காரச் சென்னையை உருவாக்கும் நீண்டகாலத் திட்டம் 2005ஆம் ஆண்டு முதல் ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு ‘மனிதநேயக் காரணமொன்றும் சொல்லப்படுகிறது: பெருவெள்ளக் காலத்தில் கரையோரப் பகுதிகளில் வாழ்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால் அவர்களை ‘பாதுகாப்பான’ இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். 2015இல் அடையாறு ஓரத்திலிருந்த குடிசைப் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதைக் காரணமாகச் சொல்லி அங்கு வசித்துக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கானோர் அங்கிருந்து அகற்றப்பட்டனர். ஆனால், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்ட குற்றச் செயலுக்கு இதுவரை யாரும் பொறுப்பாக்கப்படவில்லை.

கூவம் குடிசைகளும், தொழில் நிறுவனங்களும்
மேட்டுக்குடியினர் வசிக்கும் கோட்டூர்புரமும் அப்போது வெள்ளக்காடாக மாறியிருந்தது. அந்த சமயத்தில் இறந்துபோன பெரும் கோடீசுவரொருவரின் சடலத்தை எடுத்துச் செல்வதற்குக்கூட ஆளில்லாமல் போயிற்று. கோட்டூர்புர வாசிகள் இனி அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று அரசாங்கம் ஒருபோதும் சொன்னதில்லை. சென்னைப் பெருநகர எல்லைக்குள்ளும் புறநகர்ப் பகுதிகளிலும் கட்டப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் 2015ஆம் ஆண்டு டிசம்பரில் நிகழ்ந்ததைப் போலவே இந்த ஆண்டும் நாட்கணக்கில் மிதந்து கொண்டிருக்கின்றன. அந்த வீடுகளில் வசிப்பவர்கள் இனி ‘பாதுகாப்பான’ இடங்களுக்குச் சென்றுவிட வேண்டும் என்று ஆட்சியாளர்கள் சொல்வதில்லை. 2015இல் கிண்டி அருகேயுள்ள தனியார் மருத்துவமனையொன்றின் கீழ்ப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியதால் ஆக்ஸிஜன் தேவைப்பட்ட நோயாளிகள் பலர் பரிதாபமாக உயிரை விட்டனர். அந்த மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி ஒருபோதும் இரத்து செய்யப்படவில்லை.
அடையாறு, கூவம் கரையோரங்களில் ஏராளமான மாளிகைகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் முதலியன கட்டப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான ஏக்கர் அரசாங்க நிலம் தனியார் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் இன்றைய ஆட்சியாளர்கள் காலத்திலும் இப்படிப்பட்ட நிறுவனங்கள் சிலவற்றின் அலுவலகங்களிலும் அவற்றின் உரிமையாளர்களின் வீடுகளிலும் ‘ரெய்டுகள்’ நடத்தப்பட்டன. ஆளும் வர்க்கங்களின் ‘ஆறாம் படையாக’ செயல்படும் ஊடகங்கள் முறைகேடுகள், மோசடிகள் தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் காவல் துறையினர் கூறியவற்றை எதிரொலித்தன. ஆனால் அந்த நிறுவனங்களும் அவற்றின் உரிமையாளர்களும் இன்றுவரை எந்த பாதிப்பும் இல்லாமல் தங்கள் தொழில்களைச் சுகமாக, தங்கு தடையின்றி நடத்திக் கொண்டுதான் வருகின்றனர்.
விற்கப்படும் குடிசை மாற்று வாரிய வீடுகள்
சத்தியவாணிமுத்து நகரைச் சேர்ந்தவர்களின் போராட்டம் தொடர்பாக சிபிஎம் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் செல்வா நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்:

2005இல் குடிசை மாற்று வாரியம் கொடுத்த புள்ளிவிவரப்படி, பாதுகாப்புத் துறை, பொதுப்பணித் துறை, சத்தியவாணிமுத்து நகர் என்று பெயரிடப்பட்ட இடம் ஆகியவற்றிலுள்ள நிலத்தில் முறையே 745, 2245, 693 வீடுகள் இருந்தன. காந்தி நகர், இந்திரா நகர், சத்தியவாணிமுத்து நகர் என்றழைக்கப்படும் குடிசைப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு 1112 வீடுகள் பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ளதாக 2019 டிசம்பர் 12இல் அன்றைய குடிசை மாற்று வாரியத்தில் இருந்த கார்த்திகேயன் என்ற ஐஏஸ் அதிகாரியின் கையெழுத்தோடு வெளியிடப்பட்ட ஆவணம் கூறியது.
இந்த மூன்று ’நகர்’ பகுதிகளுக்கு அருகிலேயே தங்கள் வாழ்வாதாரங்கள், குழந்தைகளுக்கான கல்வி நிலையங்கள் முதலியவற்றைக் கொண்டுள்ள மக்களை, அவை முற்றிலுமாக இல்லாததும், இங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ளதுமான பெரும்பாக்கத்துக்கு அப்புறப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல் என்பது ஒருபுறமிருக்க, பெரும்பாக்கத்தில் அவர்களுக்காகக் கட்டப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் வீடுகளும்கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை. மாறாக, போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வீடொன்றுக்கு ரூ 2இலட்சம், 3 இலட்சம் என்ற விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 தொற்றுப் பரவலைக் காரணம் காட்டி, மேற்சொன்ன மூன்று ‘நகர்’களை’ச் சேர்ந்தவர்கள் பெரும்பாலானவர்களை போலீசாரைக் கொண்டு மிரட்டி வெளியேற்றி விட்டனர் ஆட்சியாளர்கள். **பெரும்பாக்கத்தில் வீடுகள் ஒதுக்கப்படுவதில் முறைகேடுகள் நடந்துள்ளது அம்பலமாகிவிட்டதால் இப்போது எஞ்சியுள்ள 380 குடும்பங்களை வெளியேற்றுவதற்காகத்தான் பொதுப் பணித் துறை அதிகாரி கவிதாவின் தலைமையில் போலீசார் கடந்த 9ஆம் தேதி அவர்களின் வீடுகளைக் கண்மூடித்தனமாக இடிக்கத் தொடங்கினர்.**
தலித் மக்களை பற்றி நினைக்க எங்கே நேரமிருக்கிறது
சிபிஎம், விசிககட்சியினர், இயக்குநர் பா.இரஞ்சித் ஆகியோரின் தலையீட்டின் காரணமாக இடிப்பு வேலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்காக ஒதுக்கபட்டுள்ளதாகச் சொல்லப்படும் பெரும்பாக்கம் குடியிருப்புகள் வேறு யாராருக்கோ ’ஒதுக்கப்பட்டு’விட்டதால், குறைந்தபட்சம் மணலியிலாவது அவர்களுக்கு இடம் தரும்படி துணை முதலமைச்சரிடம் சிபிஎம் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தொலைபேசியில் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்குவதுபோல் பதிலளித்த துணை முதலமைச்சர், அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எத்தனையோ முக்கிய வேலைகளில் மூழ்கியிருக்கும் அவருக்கு, கூவத்தில் தலித் மக்கள் கால்கடுக்க நின்றிருந்த அற்ப விசயத்தைப் பற்றி நினைக்க எங்கே நேரமிருக்கிறது?
கட்டுரையாளர் குறிப்பு

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.,”