தமிழக அரசு பள்ளிகளில் சுமார் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2012 முதல் பணியாற்றி வரும் இவர்களுக்கு தொகுப்பூதியமாக 12,500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. Protest enters 12th day Part-time teachers arrested
இந்த நிலையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2021 தேர்தலின் போது பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் 181 வது வாக்குறுதியாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 8ம் தேதி முதல் டிபிஐ வளாகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பகுதி நேர ஆசிரியர்கள் திடீரென டிபிஐ வளாகத்துக்கு எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்களின் போராட்டத்தை ஒட்டி ஏற்கனவே போலீசார், அவர்களை கைது செய்வதற்காக காவல்துறை வாகனங்களில் வந்திருந்தனர்.
அதன்படி, சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களை குண்டுகட்டாக கைது செய்து வேனில் ஏற்றினர்.
அப்போது ஒரு பெண் ஆசிரியர் போலீசாரின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினார்.
அவரை சுற்றி நின்ற ஐந்து பெண் போலீஸார்கள் அவரைத் தூக்கிச் செல்ல முற்பட்டனர்.
ஆனால் அந்த பெண் ஆசிரியர், என் உயிரே போனாலும் இங்கிருந்து நகரமாட்டேன். என் உரிமைக்காக போராடுகிறேன். அடக்குமுறை ஒழிக என்று தொடர்ந்து கோஷம் எழுப்பினார்.
இதையடுத்து அங்கு மற்ற ஆசிரியர்களும் வந்து போலீசாரின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது போலீசருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இருப்பினும் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று போலீஸ் வேனில் ஆசிரியர்களை ஏற்றினர்.
இதனால் டிபிஐ வளாகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தின் போது ஒருசில ஆசிரியர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தசூழலில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். Protest enters 12th day Part-time teachers arrested