தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் கல்லாணை விஜயன்பன் பெண் தொண்டர்களை உருவ கேலி செய்ததாக புகார் எழுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தவெகவின் மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் கல்லாணை விஜயன்பன். இவர் மாவட்ட நிர்வாகிகள் பதவிகளை வழங்கவும், வட்ட செயலாளர் பதவிகளை நிரப்புவதற்கும் ரூ.5,00,000 முதல் கோடிக்கணக்கில் பணம் வாங்குவதாகவும், சாதி மதம் பார்த்து கட்சி பதவிகளை வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் கட்சியில் உள்ள தவெக பெண் தொண்டர்களை உருவ கேலி செய்வதாகவும் அக்கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகிகள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் தங்கள் பகுதிகளில் உள்ள மக்களின் பிரச்சனைகளை மாவட்ட செயலாளரிடம் தெரிவித்தால் அதற்கும் கிண்டல் செய்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகளை முன் வைத்து மதுரை விசாலாட்சிபுரம் பகுதியில் இன்று (டிசம்பர் 24) 50க்கும் மேற்பட்ட பெண் தொண்டர்கள் மாவட்ட செயலாளருக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும், அவருக்கு எதிராக கோஷமிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொண்டர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் கல்லாணை சாரை மாற்ற சொல்லி நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இது போராட்டம் என்பதை விட எங்கள் எதிர்ப்பை, கோரிக்கைகளை நாங்கள் தளபதியிடம் வைக்கிறோம். மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மேலூர், சோழவந்தான் என 5 தொகுதிகளை இவர் பார்க்கிறார். மேலூர், சோழவந்தான் பகுதிக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. இதனால் சோழவந்தான், மேலூர் பகுதியில் சில நிர்வாகிகள் வெளியேறி விட்டனர். இதேபோல் மதுரை கிழக்கு தொகுதியில் சுத்தமாக வேலை பார்க்கவில்லை. அங்கிருக்கும் அமைச்சருடன் நல்ல தொடர்பில் இருப்பதால் ஆளும் கட்சியிடம் பணம் வாங்கிக் கொண்டு வேலை பார்ப்பதில்லை” என்று குற்றம் சாட்டி உள்ளார்.
ஏற்கனவே நேற்று தவெகவின் பனையூர் அலுவலகத்தில் தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா, அக்கட்சி தலைவர் விஜய் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் இரவு வரை கட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் இன்று மதுரையில் பெண் நிர்வாகிகளை உருவ கேலி செய்வதாகவும், பதவிகளை வழங்க பணம் வாங்குவதாகவும் மாவட்டச் செயலாளர் மீது குற்றம் சாட்டி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக நாமக்கல் மாவட்டத்தில் தவெகவின் கிழக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் செந்தில்நாதன். இவர் கூட்டப்பள்ளியில் உள்ள மகளிர் அணி நிர்வாகி ஒருவர் வீட்டுக்குள் அத்துமீறி சென்று உள்ளே கதவை பூட்டியதாகவும் இதைத்தொடர்ந்து அந்த நிர்வாகியின் உறவினர்கள் அவரை மீட்டதாகவும் செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து அவரை தவெக கட்சி பொறுப்பில் இருந்து தற்காலிகமாக அக்கட்சி நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன் நீக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
