டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச் செயலாக கருத முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. Protest against TASMAC shop is not a crime
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் மக்கள் அதிகாரம் இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், உரிய அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த மணிமாறன், முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது சேத்தியாதோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் சிதம்பரம் முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகானந்தம் உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில், “உள்ளூர் மக்களின் நலன் கருதியே போராட்டம் நடைபெற்றது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. போராட்டத்தின் போது எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. யாரும் எங்களுக்கு எதிராக புகார் கொடுக்கவில்லை. ஆனால் போலீசாரே தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர்” என்று வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில், “சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வகையில் எந்த அனுமதியும் பெறாமல் போராட்டம் நடத்தப்பட்டது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே வழக்கு பதிவு செய்யப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன் இன்று (ஜூன் 16) பிறப்பித்த உத்தரவில், “குடியிருப்பு பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் கடைகள் ஏற்படுத்தும் சமூக பிரச்சனை தொடர்பாக இது போன்ற சந்தர்ப்பங்களில் அமைதியான போராட்டங்களை நடத்துவது குற்றச் செயலாக கருத முடியாது.
டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதற்கு பதிலாக வேறு இடத்திற்கு மாற்றப்படுவதால் முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது.
இது போன்ற அமைதியான போராட்டங்களில் பங்கேற்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் எதிராக காவல்துறை குற்றவியல் வழக்குகளை பதிவு செய்வது, ஜனநாயக உரிமைக்கு எதிரானது.
இதுபோன்று வழக்கு பதிவு செய்வதாக இருந்தால் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பெண்கள் மீதும் வழக்கு தொடர வேண்டிய நிலை ஏற்படும்.
போராட்டங்கள் அமைதியாகவும் வன்முறை அற்றதாகவும் தொடர்ந்தால் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் அரசிடம் இருந்து உரிமைகளை கேட்கவும் முடியும் என்று கருத்து தெரிவித்த நீதிபதி சிதம்பரம் நடுவர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். Protest against TASMAC shop is not a crime