தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களுக்காக அறிவித்த, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் TAPS-க்கு மற்றொரு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

CPS ஒழிப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயராஜராஜேஸ்வரன், பிரெடெரிக் எங்கெல்ஸ், செல்வக்குமார் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
திமுக 2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண். 309-ல் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களிடம் சந்தா பிடிக்காத திட்டம். தற்போது முதல்வர் அறிவித்துள்ள தமிழ்நாடு உத்தரவாத ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களிடம் ஓய்வூதியத்திற்காக சந்தா பிடிக்கும் திட்டம். இத்திட்டமும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மறு வடிவமே.
முதல்வர் அறிவித்த திட்டம் எந்த தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்படவில்லை. ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை மொத்தமாக தொகுத்து பெறும் வாய்ப்பு இல்லை. முதல்வரின் தமிழ்நாடு உத்தரவாத ஓய்வூதியத் திட்டத்திற்கு CPS ஒழிப்பு இயக்கம் ஆட்சேபனை தெரிவிக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி CPS ஒழிப்பு இயக்கம் தொடர்ந்து போராடும்.
2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண். 309-ன்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு காலதாமதம் ஏற்படும் சூழலில் வருகின்ற 03.02.2026 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்களை இணைத்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்குச் செல்ல உள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
