அரசுப் பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற எதிர்ப்பு!

Published On:

| By admin

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே அரசுப் பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குளச்சல் அருகே ஊற்றுக்குழி அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக் கட்டடம் 100 வருடம் பழமை வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தப் பள்ளியில் 37 மாணவர்கள் உள்ளனர். பழமை வாய்ந்த இந்தக் கட்டடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. எனவே பாதுகாப்பு கருதி மாணவர்களை பிலாக்கோடு அரசு நடுநிலைப் பள்ளி கட்டடத்தின் ஒரு பகுதியில் செயல்பட கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து ஊற்றுக்குழி பள்ளி மாணவர்களை பிலாக்கோடு பள்ளிக்கு மாற்றுவதற்கு ஆசிரியர்கள் முயற்சி செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்து வந்து மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றக் கூடாது என வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்த குளச்சல் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் விரைந்து வந்து பள்ளி தலைமை ஆசிரியை தங்கம் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பள்ளிக் கட்டடத்தில் பராமரிப்பு செய்வது எனவும், பராமரிப்பு பணிகள் முடியும் வரை வகுப்புகளை அங்குள்ள சமூகநலக் கூடத்தில் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

**ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share