ADVERTISEMENT

நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? – முதல்வர் மு.க. ஸ்டாலின் காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Protest against refusal to increase rice moisture

கழனியில் பாடுபட்ட உழவர்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராடும் எங்களுக்குத் துணைநிற்க யாரிடம் அனுமதி பெற வேண்டும் என பழனிசாமி அவர்கள் காத்திருக்கிறார்? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் நனைந்து சாய்ந்தது. அதோடு குறுவை அறுவடை பெரும்பாலும் முடிவடைந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதற்காக விவசாயிகள் காத்திருந்த நிலையில் தொடர் மழைபெய்ததால் அறுவடை செய்யப்பட்ட நெல் நனைந்து போனது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை உயர்த்தி, நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தக்கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு கடிதம் எழுதினார்.

ஆனால், நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு டெல்டா விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று நெல் ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்ய மறுத்த மத்திய அரசுக்கு எதிராக திருவாரூரில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்த மறுத்த மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், ” டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து நாம் காத்திருந்தோம். ஆனால், அதிகப்படியான மழைப்பொழிவால், நெல்மணிகள் ஈரமாயின. உடனே, “சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை?”

ADVERTISEMENT

என்றெல்லாம் அதிமேதாவித்தன அரசியல் செய்தார், பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவரான மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள். நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நான் கடிதம் எழுதினேன். அந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இதோ, கழனியில் பாடுபட்ட உழவர்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராடும் எங்களுக்குத் துணைநிற்க யாரிடம் அனுமதி பெற வேண்டும் என திரு. பழனிசாமி அவர்கள் காத்திருக்கிறார்?

கூட்டணி அமைத்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மைகளைப் பெற்றுத்தர வேண்டும். சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என்று திரு. பழனிசாமி நினைக்கிறாரா? மூன்று வேளாண் சட்டங்களை மண்டி போட்டு ஆதரித்த திரு. பழனிசாமி அவர்கள், ஒருமுறையாவது தலையைச் சற்று நிமிர்த்தி நமது உழவர்களின் கோரிக்கைகளைக் கேட்கச் சொல்லியாவது சொல்வாரா?

உழவர்கள் நலன் காக்கத் தமிழ்நாடு ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இத்தனையும் கேட்கிறேன். இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழவர்கள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share