அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியாருக்கு முழுமையாக மாற்றும், தனியார் பல்கலை கழக திருத்த சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இன்று (அக்டோபர் 22) மாலை மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் தமிழக அரசு தனியார் பல்கலை கழக திருத்த சட்டத்தை கொண்டு வந்து சமூக நீதிக்கு எதிரான மாபெரும் குற்றத்தை செய்து இருக்கிறது என குற்றம் சாட்டினர்.
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அவசர அவசரமாக ஏழை மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் தனியார் பல்கலைக்கழக திருத்த சட்டத்தை அரசு கொண்டு வந்திருக்கிறது.
இந்த திருத்த சட்டத்தால் பாரம்பரியம் மிக்க அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் படிக்கும் வாய்ப்பு பறிக்கப்பட்டு இருப்பதாகவும், அரசு உதவி பெறும் கல்லூரிகள் அனைத்தும் தனியார் பல்கலைக்கழகங்களாக மாறிவிடும் எனவும், கட்டணத்தை தனியார் பல்கலைக்கழகங்கள் மட்டுமே நியமிக்கும் போது ஏழை மாணவர்களுக்கான வாய்ப்புகள் பறிபோகும் எனவும் தெரிவித்தனர்.
மேலும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் தலை சிறந்த கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் சேரும் வாய்ப்பு இந்த புதிய பல்கலை கழக திருத்த சட்டத்தால் பறிக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு மாணவர்களின் கல்வி உரிமை பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
சாதாரண கட்டணத்தில் மாணவர்கள் படிக்கும் வாய்ப்பை இந்த அரசு தட்டிப்பறிக்க கூடாது எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்களும், கல்லூரி பேராசிரியர்களும் வலியுறுத்தினர்.
