பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை மக்கள் மீதான துன்புறுத்தலுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல், காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் அகதிகளாக வந்த மக்களுக்கு எதிராக போராடுவதாகப் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடி பெங்களூருவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ளார். பெங்களூரு விவசாய பல்கலைக் கழகத்தில் நாளை நடைபெறும் 107ஆவது இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 2 மணியளவில் பெங்களூரு வந்த பிரதமர் மோடி, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து தும்கூருவுக்கு சென்றார். அங்குள்ள சித்தங்கா மடத்தில் மறைந்த மடாதிபதி சிவக்குமாருக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாயிகளுக்கான நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது, மத சிறுபான்மையினர் அங்கு துன்புறுத்தப்படுகிறார்கள். துன்புறுத்தப்பட்டவர்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பாகிஸ்தானுக்கு எதிராகப் பேசாமல், அகதிகளுக்கு எதிராகப் பேரணி நடத்துகிறார்கள்.
எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினால், கடந்த 70 ஆண்டுகளில் பாகிஸ்தான் நடத்திய அட்டூழியங்களுக்கு எதிராகக் குரல் எழுப்புங்கள். பாகிஸ்தானில் இந்துக்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் கடந்த 70 ஆண்டுகளாக துன்புறுத்தப்படுகின்றனர். அதற்காகக் குரல் எழுப்பாமல் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் குரல் எழுப்புகின்றனர் என்று காங்கிரஸைக் கடுமையாக தாக்கியுள்ளார் பிரதமர் மோடி.
பாகிஸ்தானில் இருந்து வரும் இந்துக்களுக்கு உதவுவது இந்தியாவின் பொறுப்பு என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்திய நாடாளுமன்றத்துக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரை அதுதான் அவர்களின் விதி என்று விட்டுவிடமுடியாது. பாகிஸ்தானின் செயல்பாடுகளைச் சர்வதேச அளவில் வெளிப்படுத்த அவசியம் உள்ளது என்றார். மேலும் காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது என்பது பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு படி என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் 3-வது தவணையைப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
