தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மதுபான விடுதிக்கு எதிராக தவெகவினர் இன்று டிசம்பர் 7-ந் தேதி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது, போலீஸ்காரர் ஒருவர் கையை தவெக தொண்டர் ஒருவர் வெறி கொண்டு கடித்ததாக வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது.
பாலக்கோட்டில் அரசு பள்ளிக்கு செல்லும் வழியில் தனியார் மதுபான விடுதி செயல்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த மதுபான விடுதியை அகற்ற வலியுறுத்தி பாலக்கோடு தவெகவினர் இன்று போராட்டம் நடத்தினர். மதுபான விடுதியை முற்றுகையிட்டு 300-க்கும் மேற்பட்டோர் முழக்கங்களை எழுப்பினர். போலீசார் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதால் தவெகவினர் கைது செய்யப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
அப்போது தவெக தொண்டர் ஒருவர் திடீரென வெறிபிடித்தது போல போலீஸ்காரர் ஒருவரின் கையை கடித்து வைத்தார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சி பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
