“விவசாயத்தை பாதுகாப்போம்” : கன்னியாகுமரி டூ காஷ்மீருக்கு மாட்டுவண்டி பயணம்!

Published On:

| By Kavi

விவசாயம் மற்றும் விவசாயிகளை பாதுகாப்பதன்  அவசியத்தை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இளைஞர் ஒருவர் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டு வருகிறார். இவரது செயல் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம்,  சங்ககிரியைச் சேர்ந்தவர் சந்திர சூரியன்(35). பட்டதாரி இளைஞரான இவருக்கு  திருமணம் முடிந்து ஒரு மகன் உள்ளார். 

படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்தும் வேலைக்கு செல்லாமல் விவசாயத்தின்மீது கொண்ட பற்று காரணமாக தனது சொந்த ஊரிலேயே கடந்த 10வருடங்களாக விவசாயம் செய்து வருகிறார். 

இந்நிலையில், விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஜனவரி 1இல் கன்னியாகுமரியிலிருந்து தனது ஒற்றை மாட்டு வண்டியில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.  

நேற்று(ஜனவரி 29) விருதுநகருக்கு வருகை தந்த சந்திரசூரியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இன்றைய தலைமுறையினர் விவசாயத்தை மறந்து தனது படிப்பிற்கு தகுந்த வேலையைத் தேடி அண்டை மாநிலங்களுக்கும், அயல்நாடுகளுக்கும் சென்று அங்கு அடிமையாக வேலை செய்கின்றனர். 

ஆகையால் இன்றைய தலைமுறையினர் எவ்வளவு சம்பாதித்தாலும் உண்பதற்கு உணவில்லை எனில் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. ஆகவே இன்றைய தலைமுறையினர்,  விவசாயம் செய்வதைக் கற்றுக் கொண்டு விவசாயம் செய்தால் தான்  நம் நாடும் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். 

விவசாயிகள் விளைவித்த உணவுப் பொருள்களுக்கு சரியான விலையை ஒன்றிய அரசும்,  மாநில அரசும் நிர்ணயம் செய்திடவேண்டும்.

நாட்டு இனமாடுகளின் அழிவால் தான், இயற்கை உரங்கள் அடியோடு அழிந்து விட்டன. இதன் காரணமாகவே, ரசாயன உரங்களும், பூச்சி கொல்லி மருந்துகளும் வந்து நம் மண்ணையும், மண்ணில் வாழ்ந்த நுண்ணுயிரிகளையும் அழித்து பாழாக்கிவிட்டன.

எனவே, அழிந்துவரும் நாட்டு இனமாடுகளை பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார். 

மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி காஷ்மீர் வரை  சுமார் 3600கி.மீ பயணம் மேற்கொண்டு அங்கு நிறைவு செய்ய உள்ளதாகவும் கூறினார்.   

சக்தி

ரஷ்யா – உக்ரைன் போர்: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share