இந்தியா- நெதர்லாந்து அணிகளுக்கிடையேயான இன்றைய (அக்டோபர் 27) போட்டியின் இடையே அரங்கில் அமர்ந்திருந்த ரசிகர் ஒருவர் தனது காதலிக்கு மோதிரம் அணிவித்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 22 ஆம் தேதி முதல் சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகிறது.
சூப்பர் 12 போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடனான முதல் வெற்றிக்கு பிறகு தனது இரண்டாவது போட்டியை இன்று (அக்டோபர் 27) நெதர்லாந்து அணியுடன் விளையாடியது.
இந்திய அணிக்குப் பிறகு பேட்டிங் செய்து கொண்டிருந்த நெதர்லாந்து அணி தனது 6 வது ஓவரில் விளையாடிக் கொண்டிருந்த போது போட்டியின் இடையே மைதான கேலரியிலேயே ஒரு காதல் மலர்ந்தது.
கிரிக்கெட் மைதானத்தில் போட்டியை பார்ப்பதற்கு வந்த ரசிகர் ஒருவர் தனது தோழிக்கு மோதிரத்தை அணிவித்த வீடியோவை ஐசிசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அந்த வீடியோவில், மைதானத்தில் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவர் தனது தோழிக்கு முன்பு மண்டியிட்டு மோதிரத்தை அணிவிக்கிறார். மோதிரம் அணிவிக்கும் போது தன்னை திருமணம் செய்து கொள்வாயா? என்று கேட்கிறார்.
இதனைச் சற்றும் எதிர்பார்க்காத அப்பெண் மகிழ்ச்சியில் அவரின் காதலை ஏற்றுக் கொள்கிறார். அவர் தனது காதலிக்கு மோதிரம் அணிவிக்கும் போது சுற்றி இருந்த மற்ற ரசிகர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
இந்த வீடியோவை பார்த்த சிலர் “அது கிரிக்கெட் மைதானமா? அல்லது காதலர்கள் மைதானமா?” என்று தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இருப்பினும் தற்போது இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளைக் கடந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மோனிஷா
T20 WorldCup 2022: நெதர்லாந்தை சுருட்டி வீசி முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா!