ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ரூ.10 லட்சம் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துகள், பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால், அத்தகைய ஆவணங்களுக்கு பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. Property in women name
இந்தநிலையில் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இதற்கான விதிமுறைகளை நேற்று (ஏப்ரல் 2) அறிவித்தார். யார் யாருக்கு இந்த சலுகை பொருந்தும் , பொருந்தாது என்று வெளியிட்ட அறிவிப்பில்,
“ஒரு சொத்தை வாங்குபவர் பெண்ணாக இருக்க வேண்டும். பெண்கள் கூட்டாக வாங்கப்படும் நிலங்களுக்கும் இந்த கட்டண சலுகை பொருந்தும்.
பதிவு ஆவணம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியில் நிலவும் சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பின்படி சொத்தின் மதிப்பு 10 லட்சம் வரை மட்டுமே இருக்க வேண்டும். ஒரு சொத்தை வேண்டுமென்றே பல பகுதிகளாகப் பிரிக்கக்கூடாது.
ஒரு 2400 சதுர அடி காலிமனையின் சந்தை வழிகாட்டி மதிப்பின்படி ரூ.12,00,000 வருகிறது. இந்த காலிமனையினை இரண்டு 1200 சதுர அடி அல்லது நான்கு 600 சதுர அடி பிரித்து ஆவணங்கள் வேறு வேறு பெண்கள் (குடும்ப நபர்கள் (அ) குடும்ப நபர்கள் இல்லாமால்) பெயரில் வாங்க ஆவணம் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டாலும் இந்த சலுகை பொருந்தும்.
ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் முதல் கிரையம் ஆவணங்களுக்கு கூட்டு வழிகாட்டி மதிப்பு மற்றும் இரண்டாவது கிரையம் ஆவணங்களுக்கு சந்தை வழிகாட்டி மதிப்புடன் பொதுப்பணித்துறை கட்டிட மதிப்பு சேர்த்து ரூ10,00,000 வருகிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே பெண் பெயரில் எத்தனை அடுக்குமாடி வீடுகள் தனித்தனியாக வாங்கினாலும் இந்த சலுகை பொருத்தும்.
ஒரு மனைப்பிரிவில் இரண்டு அல்லது மூன்று மனைகளை தனித்தனி ஆவணங்கள் மூலமாக வாங்கினால் ஒவ்வொரு ஆவணத்திற்கும் சந்தை வழிகாட்டி மதிப்பு ரூ.10,00,000 க்குள் வரும் நிலையில் ஒரே பெண் பெயரில் வாங்க பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டாலும் இந்த சலுகை பொருந்தும்.
ஒரு 2400 சதுர அடி காலிமனையின் சந்தை வழிகாட்டி மதிப்பின்படி ரூ.12,00,000 வருகிறது என்றால் இந்த சலுகை பெறுவதற்காக இரண்டு 1200 சதுர அடி அல்லது நான்கு 600 சதுரடியாக பிரித்து ஆவணங்கள் ஒரே பெண் பெயரில் வாங்க இந்த சலுகை பொருந்தாது.
பத்திரப் பதிவுக்கு பிறகு ஆய்வு செய்யும்போது, மதிப்பு ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக இருப்பது தெரியவந்தால், சலுகை வழங்கப்பட்ட தொகையையும் திருப்பி செலுத்த நேரிடும்.
இது குறித்து சம்பந்தப்பட்ட மண்டல துணைப் பதிவுத்துறை தலைவர் மற்றும் நிர்வாக மாவட்டப் பதிவாளர்களால் கண்காணிக்கப்பட வேண்டும்.
இதில் ஏதும் தவறாக சலுவை அளிக்கப்பட்டலோ அல்லது அளிக்க வேண்டிய சலுகை உரிய நபர்களுக்கு அளிக்கப்படாமல் பொதுமக்களிடமிருந்து புகார் பெறப்பட்டாலும் சம்பந்தப்பட்ட பதிவு அலுவலர்களின் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Property in women name