தூய்மைப் பணியாளர்களின் மாத சம்பளத்தை முறைப்படுத்த கோரிக்கை!

Published On:

| By Monisha

proper salary for government school workers

அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கும், வகுப்பறைகளை கூட்டிப் பெருக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கும் மாதந்தோறும் முறையாக ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்யவும், அனைத்து வகுப்பறைகளையும் கூட்டிப் பெருக்கவும் வேலையாட்கள் நியமிக்கப்படுகின்றனர். கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் அந்தந்த பள்ளிக்கு தேவையான தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.இவர்களுக்கு ஒன்றிய பொது நிதி, நகராட்சி பொது நிதியில் இருந்து மாத சம்பளமும், கழிப்பறைகளை தூய்மை செய்வதற்கான மூலப்பொருட்களை வாங்கிக்கொள்ள உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நிதியும் ஒதுக்கப்படுகிறது.

ADVERTISEMENT

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஒரு தூய்மைப் பணியாளருக்கு மாதம் ரூ.700-ம், அதற்கான பொருட்களை வாங்க ரூ.300 என மாதம் 1,000 ரூபாய் ஒன்றிய பொது நிதியில் இருந்து ஒதுக்கப்படுகிறது. அதேபோல, நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.1,500-ம், உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.2,250-ம், மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.3,000 நிதி ஒதுக்கீடு செய்து மாதம்தோறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகளை தூய்மை செய்ய கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலமாக நியமிக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் முறையாக சம்பளம் வழங்கப் படுவதில்லை என கூறப்படுகிறது. இதனால், பல பள்ளிகளில் தூய்மைப்பணி செய்ய ஆட்கள் வராததால் அந்தப் பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகின்றன.

ADVERTISEMENT

சுகாதாரமற்ற கழிப்பறைகளால் மாணவிகளே அதிக அளவு சிரமத்துக்குள்ளாவதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும், பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே தூய்மைப் பணியாளர்களுக்கு தங்களது சொந்த பணத்தை சம்பளமாக வழங்கி வருவதாகவும், ஆண்டுக்கணக்கில் சம்பள பாக்கி இருப்பதால் தூய்மைப்பணிக்கு வர யாரும் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

எனவே தலைமை ஆசிரியர்கள் மூலமாக தூய்மைப் பணியாளர்களின் மாத சம்பளத்தை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து பேசியுள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர், ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் 90 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் உள்ளன. 30 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. 600-க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், பல பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்களுக்கு மாதச்சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஆட்கள் வருவதில்லை. சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், தங்கள் சொந்த செலவில் ஆட்களை நியமித்து கழிப்பறைகளை சுத்தம் செய்து வருகின்றனர்.

சில பள்ளிகளில் பணம் வசூல் செய்யப்பட்டு கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. இதை செய்ய முடியாத பள்ளிகளில் கழிப்பறை வசதி என்பது கேள்விக்குறியாகவே மாறியுள்ளது. திறந்தவெளி கழிப்பறையை பயன்படுத்த வேண்டிய நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வீடு தோறும் தனிநபர் கழிப்பறை வசதியை ஏற்படுத்த ஆர்வம்காட்டும் மத்திய, மாநில அரசுகள் பள்ளிகள் மீது கவனம் செலுத்தி, இதற்கான நிரந்தர தீர்வை காண வேண்டும்.

அதேபோல, வகுப்பறைகளை கூட்டி பெருக்கும் பணியில் ஈடுபடும் துப்புரவுப் பணியாளர்கள் பணி ஓய்வு பெற்று விட்டால் அதன் பிறகு அந்த இடத்தில் புதிய ஆட்கள் நியமிக்கப்படுவதில்லை. திருப்பத்தூர் மாவட்டத்தில் 70 சதவிகிதம் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர் பணியிடம் காலியாகவே உள்ளது. இதை நிரப்ப தமிழக அரசு முன்வர வேண்டும்.

குறிப்பாக, பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்க முடியாவிட்டாலும் மூன்று மாதம் அல்லது ஐந்து மாதங்களுக்கு ஒருமுறை சம்பளம் வழங்கப்பட வேண்டும். விரைவில், அனைத்தும் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜ்

வேலைவாய்ப்பு : மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையில் பணி!

சிறையில் சந்திரபாபு… மாநிலம் முழுவதும் பந்த்… ஆந்திராவில் பதற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share