ப்ராமிஸ், மதர் பிராமிஸ் , காட் பிராமிஸ் , என்று விதவிதமான பிராமிஸ்களும் அதை மீறுவதும் மீறி விட்டு வருத்தப்படுவதும், நெருப்புன்னா வாய் வெந்துடுமா என்று சும்மா ஊதிவிட்டுப் போகிற ஆட்களும் உள்ளதுதான் நம்ம உலகம்.
”தப்பு சார் .. அது தப்பு .. பிராமிஸ் னா எவ்ளோ முக்கியம் தெரியுமா?” என்று சொல்ல வருகிறது ஒரு படம்.
சங்கமித்ரன் புரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க, அருண்குமார் சேகரன், புதுமுகம் நதியா சோமு நடிக்க, மேற்படி அருண்குமார் சேகரனே இயக்கி இருக்கும் படம் பிராமிஸ்.
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் படமாம் இது.

படம் பற்றிக் கூறும் இயக்குனர், “ப்ராமிஸ் என்ற சொல்லுக்கு சத்தியம், உத்தரவாதம், உறுதி என்ற பல்வகையான பொருள் உண்டு.. எழுத்து மூலமாக எழுதப்படும் ஆவணம் தெரியும். அது போன்ற மதிப்பு மிக்கது வாய்மொழியாகச் சொல்லப்படும் சத்தியம். அதாவது ப்ராமிஸ்.
அதனால்தான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கும் போது முதலில் ‘நான் சொல்வதெல்லாம் உண்மை’ என்று சத்தியம் செய்யச் சொல்கிறார்கள். வாய்மொழியாகச் சொல்லப்படும் ப்ராமிஸ் எனப்படும் அந்த சத்தியத்தின் பின்னே இருப்பது உண்மையும் நம்பிக்கையும் உறுதிப்பாடும் தான். இறுதியில் தான் ஜெயிக்கும். அதனால்தான் நமது தேசியச் சின்னத்தில் ‘சத்யமேவ ஜெயதே’, அதாவது வாய்மையே வெல்லும் என்று எழுதப்பட்டுள்ளது.
இந்திய மக்களிடம் புகழ்பெற்ற உண்மையே பேசிய அரிச்சந்திரனும் அவனைப் பின்பற்றிய காந்தியும் வரலாற்றில் சத்தியத்தின் சாட்சியங்களாக இருப்பதை அறியலாம்.
அப்படி அந்தச் சத்தியத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம்தான் ப்ராமிஸ்”என்கிறார்.
ரசிக்கிற மாதிரி படம் எடுத்து இருக்கீங்களா அருண்குமார் சேகரன்? பிராமிஸ்?
— ராஜ திருமகன்
