நீலாம்பூர் – மதுக்கரை சாலை குறித்த குட் நியூஸ்.. ரூ.1800 கோடி செலவில் திட்ட அறிக்கை தயார்

Published On:

| By Pandeeswari Gurusamy

Project report for the Neelambur Madukkarai road widening.

நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை உள்ள புறவழிச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற ரூ.1800 கோடி செலவில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய நெடுஞ்சாலை அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக சேலம் – கொச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இது மேற்கு மண்டலத்திலுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு,சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கேரளாவுக்கு சென்று வர பெரிதும் உதவுகிறது.

ADVERTISEMENT

இதனால் சேலத்தில் தொடங்கி, ஈரோடு – கோவை -பாலக்காடு – திருச்சூர் வழியாக கொச்சியில் முடியும் இந்த தேசிய நெடுஞ்சாலை (எண் 544) வழித்தடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் பொது மற்றும் தனிப்போக்குவரத்து வாகனங்களும் செல்கின்றன.

முக்கியமாக தொழில் நகரங்களாக திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சரக்குகளை கண்டெய்னர்கள் மூலம் கொச்சி துறைமுகத்திற்கு எடுத்து செல்ல இந்த சாலை பயன்படுத்தப்படுகிறது. துறைமுகத்தில் இருந்து பொருட்கள் பிற நாடுகளுக்கு அனுப்பப்படுவதால் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக சேலம் கொச்சி தேசிய நெடுஞ்சாலை பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த முக்கியத்துவம் வாய்ந்த சாலை சேலம் முதல் நீலாம்பூர் வரை 6 வழிச்சாலையாகவும் உள்ளது. கோவை நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரை உள்ள 28 கி.மீ தூர புறவழிச்சாலை இருவழிச்சாலையாக 10 மீட்டர் அகலத்திற்கு இருந்தது. மதுக்கரை முதல் வாளையார் வரை 4 வழிச்சாலையாக உள்ளது.

இதனால் நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை உள்ள பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இந்த சாலை எல் அண்டு டி வசம் இருந்ததால் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறாமல் இருந்தது. அந்த சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நீலாம்பூர் – மதுக்கரை இடையேயான 28 கி.மீ தேசிய நெடுஞ்சாலைப் பகுதியை (NH 544-ன் பகுதி) அதன் ஒப்பந்த காலம் முடிந்ததால், 2025 மார்ச்-ஜூன் மாதங்களில் தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் எல் அண்டு டி நிறுவனம் ஒப்படைத்ததுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை உள்ள சாலையை அகலப்படுத்த தேசிய நெடுஞ்சாலை பிரிவு கள ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இந்த சாலை கொண்டு வரப்பட்டதால் ஆணையம் ஆய்வு மேற்கொண்டு ரூ.1800 கோடி செலவில் 6 வழியாக்க அறிக்கை தாயாரித்து மத்திய நெடுஞ்சாலை அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒப்புதல் பெற்று நிதி ஒதுக்கீடு பெற்று பணிகளை துவக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share