மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கில் கைதாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட, டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா நேற்று (அக்டோபர் 12) இரவு காலமானார். அவருக்கு வயது 57.
டெல்லி பல்கலைக்கழகத்தின் ராம் லால் ஆனந்த் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் ஜி.என். சாய்பாபா.
பழங்குடியினரின் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பி வந்த அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் நாக்பூர் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டதை அடுத்து கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் 2017ஆம் ஆண்டு தீர்ப்பளித்த நாகபுரி ஷெஷன்ஸ் நீதிமன்றம், பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
இதனை எதிர்த்து சாய்பாபா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை நீதிமன்ற நீதிபதிகள் வினய் ஜோஷி மற்றும் வால்மீகி எஸ்.ஏ.மெனேசஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான சான்றுகளும் இல்லை எனக்கூறி விடுதலை செய்தது. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
கிட்டதட்ட 10 ஆண்டு சிறைவாசத்திற்கு பின் நாக்பூர் மத்திய சிறையில் இருந்து மார்ச் 7ஆம் தேதி சாய்பாபா விடுதலையானார்.
சக்கர நாற்காலியில் இருந்த மாற்றுத்திறனாளியான சாய்பாபா பித்தப்பை புற்றுநோய் காரணமாக 10 நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள நிஜாமின் மருத்துவ அறிவியல் கழகம் மருத்துவமனையில் (NIMS) அறுவை சிகிச்சை செய்து ஓய்வெடுத்து வந்தார். ஆனால் சிகிச்சைக்குப் பின் ஏற்பட்ட சிக்கல்களால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நேற்று இரவு 9 மணியளவில் உயிரிழந்தார்.
கடந்த 10 வருடங்களாக சிறையில் இருந்தபோது, அங்கிருந்த அதிகாரிகள் தன்னை துன்புறுத்தி, சித்திரவதை செய்யப்பட்டதாக சாய்பாபா குற்றஞ்சாட்டியிருந்தார். சிறையில் இருந்த காலத்தில் அவர் 27 முறை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், தனக்கு நிரந்தர போலியோ பக்கவாதம் இருந்தபோதிலும், மருந்து கொடுக்க அதிகாரிகள் மறுத்தனர் என்று விடுதலையான பின்னர் அவர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
மேலும் டெல்லி பல்கலைக்கழகத்தில் தனது வேலையைத் திரும்பப் பெறுவதற்காக சட்டப்பூர்வமாக போராடி வந்த நிலையில், தற்போது பேராசிரியர் சாய்பாபா உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது உயிரிழப்புக்கு மத்திய பாஜக அரசே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் என பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
முன்னாள் அமைச்சர் சுட்டுக்கொலை… தலைவர்கள் கண்டனம் : மகாராஷ்டிராவில் பதற்றம்!
சஞ்சு – சூர்யா சூறாவளி ஆட்டம்… வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்த இந்தியா!
Comments are closed.