பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி 5.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அஜய் ஜெகதீஷ் என்பவர் கொடுத்த புகாரில் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த புகாரில் ரவீந்தர் சந்திரசேகரின் கூட்டாளிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். Ravinder Chandrasekar
பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி தன்னிடம் சுமார் கடந்த ஆண்டு 5.5 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக மும்பையைச் சேர்ந்த அஜய் ஜெகதீஷ் என்பவர் புகார் அளித்தார். இந்த மோசடி விவகாரம் தொடர்பாக பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை போலீஸ் சம்மன்
முன்னதாக கேரளாவைச் சேர்ந்த ரோகன் மேனன் என்பவரை மும்பை குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மோசடி செய்யப்பட்ட பணம் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் கணக்கிற்கு மாற்றப்பட்டது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து மும்பை சிபிசிஐடி காவல்துறையினர் நேற்று சென்னை வந்தனர். கே.கே. நகரில் உள்ள ரவீந்தர் சந்திரசேகர் இல்லத்திற்குச் சென்றபோது அவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை உடனடியாக கைது செய்யாமல் காவல்துறையினர் சம்மன் மட்டும் கொடுத்துவிட்டுத் திரும்பி உள்ளனர்.
ரவீந்தரின் கூட்டாளிகள் கைது
இந்த சமனில் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் ரவீந்திரன் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கிண்டியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் கொளத்தூரைச் சேர்ந்த பாண்டி ஆகிய இருவரையும் மும்பை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் இருவருக்கும் ட்ரான்சிட் வாரண்ட் பெற்று மும்பைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரவீந்தர் சந்திரசேகர் பணத்தை கிரிப்டோ கரென்சியாக மாற்றி வெளிநாடுகளில் உள்ள வேறு கணக்கிற்கு மாற்றி உள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்த புதிய தகவலைத் தொடர்ந்து ரவீந்தரை அடுத்த கட்டமாகக் கைது செய்ய வாய்ப்புள்ளதாக மும்பை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அசோக் நகரில் லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ரவீந்தர் சந்திரசேகர் ஏற்கனவே 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாகச் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை மத்திய குற்றவியல் பிரிவில் புகார் அளித்தார்.
நகராட்சி திட்டக் கழிவுகளை இயற்கை ஆற்றலாக மாற்றும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும் 200 கோடி ரூபாய் மதிப்பிலான அந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி தன்னை திட்டமிட்டு முதலீடு செய்ய வைத்து மோசடி செய்தார் என பாலாஜி குற்றம் சாட்டினார். இது தொடர்பான வழக்கில் ரவீந்தர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
பேட்மேன் என்று அழைக்கப்படும் ரவீந்தர் சந்திரசேகர் கடந்த 2022ம் ஆண்டு பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்தார். நட்புனா என்னன்னு தெரியுமா, நளனும் நந்தினியும், முருங்கைக்காய் சிப்ஸ், லிப்ட் உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகர்.
