தயாரிப்பாளர் கலைப்புலி ஜி சேகரன் மறைவு… நடிகர் கிங்காங் கண்ணீர்!

Published On:

| By christopher

producer kalaipulai g sekaran died at 73 age

தயாரிப்பாளரும், நடிகர், இயக்குநர் என பன்முக ஆளுமைக் கொண்ட கலைப்புலி ஜி சேகரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (எப்ரல் 13) காலமானார். அவருக்கு வயது 73. producer kalaipulai g sekaran died at 73 age

திரையுலகில் சினிமா விநியோகஸ்தராக தொடங்கி, நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், சங்கத் தலைவர் என பல தளங்களில் இயங்கி வந்தவர் கலைப்புலி ஜி.சேகரன் .

சினிமா விநியோகஸ்தராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் ஜி.சேகரன். பின்னர் எஸ்.தாணு உடன் இணைந்து கலைப்புலி பிலிம்சின் பங்குதாரராக இணைந்து தயாரிப்பாளர் ஆனார்.

அதனைத் தொடர்ந்து எஸ் தாணு தயாரிப்பில் 1985-ம் ஆண்டு வெளியான திகில் திரைப்படமான ‘யார்’ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். இப்படம் 100 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடியது. அதன்பின்னர் ஜமீன் கோட்டை, குடும்பச் சங்கிலி படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

நடிகரானதைத் தொடர்ந்து 1988-ம் ஆண்டு ‘ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்’, அதன்பின்னர் ‘காவல் பூனைகள்’, ‘உளவாளி’, கட்டுவிரியன்’ என அடுத்தடுத்து படங்களையும் இயக்கினார். விநியோஸ்தர்கள் சங்க தலைவராகவும் இருந்தார். தொடர்ச்சியாக சிறு படங்களுக்கு ஆதரவாக திரையுலகில் குரல் கொடுத்து வந்தார்.

இந்த நிலையில், கலைப்புலி ஜி. சேகரன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று மதியம் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராயப்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நடிகர் கிங்காங், தனது குருநாதரான கலைப்புலி ஜி சேகரன் மறைவுக்கு உருக்கமுடன் இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், “கலைப்புலி ஜி சேகரன் என்னுடைய குருநாதர். அவர் தான் எனக்கு கிங்காங் என பெயரிட்டு திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தார். அவருடைய அனைத்துப் படங்களிலும் எனக்கு முக்கியமான கேரக்டரை கொடுத்து விடுவார். அவரது இறப்புச் செய்தி கஷ்டமாக இருக்கிறது. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என கிங்காங் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share