ஆரம்பத்திலேயே படத்தின் டிரைலர் கொஞ்சம் எதிர்பார்ப்பையும் உருவாக்கி இருந்தது என்றாலும், அதையும் மீறி பேய் ஓட்டம் ஓடிய படம் டூரிஸ்ட் ஃபேமிலி.
திரைக்கதை வெகு சுமார்தான் என்றாலும், இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டுத் தமிழர்களின் அன்பு இருக்கிறது என்று சொன்ன கதையும் அந்த நெகிழ்வான கிளைமாக்சும் மக்கள் மனங்களை கொள்ளை கொண்டன.
ஈழம் அழியும்போது கண்டு கொள்ளாமல் விட்டு விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியை, இந்தப் படத்தை ஆதரிப்பதன் மூலம் தீர்த்துக் கொள்ள முயன்றார்கள் தமிழக மக்கள்.
படத்தை இயக்கி ஒரு கேரக்டரிலும் நடித்து இருந்த அபிஷன் ஜீவித், அடுத்து Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் டூரிஸ்ட் பேமிலி படத்தைத் தயாரித்த MRP Entertainment பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் இணைந்து தயாரிக்கும், ஒரு புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

வரும் அக்டோபர் 31 ஆம் தேதி அபிஷனுக்கு திருமணம் நடக்கவுள்ள நிலையில், அவருக்கு திருமணப் பரிசாக கார் ஒன்றை பரிசளித்துள்ளார் டூரிஸ்ட் பேமிலி படத்தின் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான்.
இயக்கிய படம் வந்த நேரம், ஹீரோவாக சான்ஸ் வந்தது. ஹீரோவாக சான்ஸ் வந்த நேரம் கல்யாணம் வருகிறது. கல்யாணம் வந்த நேரம் கார் வருகிறது.
இதுக்குப் பெயர்தான் செயின் ரியாக்ஷன். அதுவும் கோல்டு செயின் ரியாக்ஷன்!.
– ராஜ திருமகன்
