கஸ்தூரி வெளிவருவதில் சிக்கல்?

Published On:

| By christopher

தெலுங்கர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட நிலையிலும், அவர் புழல் சிறையில் இருந்து இன்று (நவம்பர் 20) வெளிவருவது கேள்வி குறியாகியுள்ளது.

கடந்த நவம்பர் 3ஆம் தேதி சென்னை எழும்பூரில், பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரி,  “மன்னர்களின் அந்தப்புரத்து மகளிருக்கு சேவை செய்தவர்கள்தான் தெலுங்கர்கள். எப்போதோ இங்கு வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? ” என்று பேசியிருந்தார்.

கஸ்தூரியின் இந்த பேச்சுக்கு திமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டத்தை பதிவு செய்தன. இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் மன்னிப்பு கோரிய நிலையிலும், சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தலைமறைவான கஸ்தூரி முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நடிகை கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டு போல் உள்ளது என அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் டாக்டர் கண்ணன் அமைத்த தனிப்படை போலீசார் கடந்த நவம்பர் 16ஆம் தேதி கைது செய்தனர்.

இதையடுத்து சென்னை அழைத்துவரப்பட்ட கஸ்தூரி சென்னை எழும்பூர் நீதிமன்ற குடியிருப்பு வளாகத்தில் ஐந்தாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரகுபதி ராஜா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது ”எனக்கு மாற்றுத் திறன் குழந்தை இருக்கிறான். அவனை பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே என்னை சொந்த ஜாமீனில் விடுவிக்க வேண்டும்” என நீதிபதியிடம் மன்றாடினார்.

அதனை ஏற்க மறுத்த நீதிபதி ரகுபதி, கஸ்தூரிக்கு நவம்பர் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டார். அதன்படி அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே அவர் தரப்பில் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த 18ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தான் சிங்கிள் மதர் என்றும் தனக்கு ஸ்பெஷல் சைல்டு இருப்பதாகவும், அதனால் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். மேலும் ஜாமீன் விஷயத்தில் நீதிமன்றங்கள் குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு அணுக வேண்டுமென எதிர்பார்க்கிறோம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் மனைவியும் சக்ஷம் மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பின் இந்திய துணைத் தலைவருமான காமாட்சி சுவாமிநாதன் ஆதரவு தெரிவித்ததும் கவனம் பெற்றது.

இந்த வழக்கு இன்று நவம்பர் 20ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், ’கண்டிப்பாக ஜாமீன் கிடைக்கும் என்று கஸ்தூரிக்கு அவரது வழக்கறிஞர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் அவரது வழக்கறிஞர்களை ஜாமீன்தாரர்களையும் தயார் செய்திருந்தனர்.

இந்த நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்பு கஸ்தூரி ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று காலை நடந்தது. அப்போது, மனிதாபிமானம் அடிப்படையில் ஜாமீன் மனுவுக்கு ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை என காவல்துறை சார்பில் கூறப்பட்டது. கஸ்தூரி தரப்பு வழக்கறிஞரும் கருணை அடிப்படையில் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாலையில் தீர்ப்பு வழங்குவதாக கூறி ஒத்திவைத்தார்.

அதன்படி இன்று மாலை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கஸ்தூரிக்கு எழும்பூர் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கினார் நீதிபதி தயாளன்.

எனினும் மாலை நேரத்தில் ஜாமீன் உத்தரவானதால், நீதிமன்றத்தில் surety வழங்குவதற்கான நடைமுறையை முடிக்கவும், அதன் நகலை புழல் சிறையில் வழங்கவும் மேலும் சில மணி நேரம் கால தாமதம் ஆனதால் அவர் இன்று சிறையில் இருந்து வெளி வருவது கேள்வி குறியாகியுள்ளது.

மேலும் சிறையில் உள்ள கஸ்தூரிக்கு ஜாமீன் கிடைத்தாலும், அவர் சிறையில் இருந்து வருவதில் சில சிக்கல்கள் உள்ளது என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.

இதுபற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, “சம்பவமும், குற்றத்தன்மையும் ஒன்று தான். வழக்குகள் திருச்சி, தேனி, மதுரை, சென்னை என வெவ்வேறு இடத்தில் இருந்தாலும், அதெல்லாம் ஒன்றாக சேர்த்து இந்த ஒரே ஜாமீன் பொருந்தும். அவரது வழக்கறிஞர்களும் இந்த கருத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் நாளை கஸ்தூரி வெளி வருவதற்கு எந்த தடையும் இருக்காது என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

வணங்காமுடி

சர்ச்சை பேச்சு : நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்!

நடிகை கஸ்தூரியின் குழந்தைக்காக… நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மனைவி கோரிக்கை!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு : காவல்துறை பற்றி நீதிமன்றம் சொன்னது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share