நாளை (டிசம்பர் 10) இரவு நடைபெறும் முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த பெங்கால் வாரியர்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி எதிர்கொள்கிறது.
புரோ கபடி லீக்கின் 10-வது சீசன் கடந்த டிசம்பர் 2-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 21-ம் தேதி வரை இந்த புரோ கபடி தொடர் நடைபெறவுள்ளது.
இதில் பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கேசி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்தான், பெங்கால் வாரியர்ஸ், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா, யுபி யோதாஸ் என 12 அணிகள் களமிறங்கியுள்ளன.
புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் வென்று குஜராத் அணி முதல் இடத்தில் உள்ளது.
இரண்டாவது இடத்தில் 2 வெற்றிகளுடன் பாட்னா பைரேட்ஸ் அணியும், 3-வது இடத்தில் 1 வெற்றியுடன் பெங்கால் வாரியர்ஸ் அணியும், இதேபோல 1 வெற்றியுடன் 6-வது இடத்தில் நம்முடைய தமிழ் தலைவாஸ் அணியும் உள்ளது.
இந்த நிலையில் நாளை (டிசம்பர் 10) பெங்களூர் ஸ்ரீ காண்டிரவா உள்விளையாட்டு அரங்கத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சாகர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி – பெங்கால் வாரியர்சை எதிர்கொள்கிறது.
விளையாடிய முதல் போட்டியிலேயே வெற்றிவாகை சூடிய தமிழ் தலைவாஸ் அணி பெங்காலை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்திட தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக தமிழ் தலைவாஸ் அணியின் அஜிங்கியா பவர், நரேந்தர் இருவரும் கடந்த ஆட்டம் போலவே எதிர் அணியை அலற விட்டார்கள் என்றால் 2-வது போட்டியிலும் வெற்றி நமக்குத்தான்.
Rise and grind! Kicking off the day with a sunrise sweat session. 💪#IdhuNammaTeam | #GiveItAllMachi | #TamilThalaivas | #ProKabaddi | #Season10 pic.twitter.com/AJL6ZlORU8
— Tamil Thalaivas (@tamilthalaivas) December 8, 2023
அதேபோல பெங்கால் அணி முதல் போட்டியை வென்று 2-வது போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பிட அந்த அணி தீவிரமாக முயற்சிக்கும்.
மறுபுறம் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள தமிழ் தலைவாஸ் அணியும் கடுமையாக முயற்சி செய்யும். இதனால் நிச்சயம் நாளைய (டிசம்பர் 10) ஆட்டத்தில் அனல் பறந்திட வாய்ப்புகள் உள்ளன.
தமிழ் தலைவாஸ் – பெங்கால் வாரியர்ஸ் போட்டியை தொடர்ந்து, 9 மணிக்கு நடைபெறவுள்ள இரண்டாவது ஆட்டத்தில் தபாங் டெல்லி கேசி அணி, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
சென்னை வெள்ளம்: விசாரணை நடத்த மத்திய இணை அமைச்சர் வலியுறுத்தல்!
“கடின உழைப்பு வீண் போகாது” : 70 மணி நேர வேலை குறித்து நாராயண மூர்த்தி