புரோ கபடி 11வது லீக் முதற்கட்ட போட்டிகள் 12 அணிகள் இடையே, கடந்த அக்டோபர் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கி நடந்தது.
அடுத்து, 2ஆம் கட்ட லீக் போட்டிகள் நொய்டாவிலும், 3ம் கட்ட லீக் போட்டிகள் புனேவிலும் நடந்தன. லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களை பெற்ற ஹரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறின.
புள்ளிப் பட்டியலில் 3 முதல் 6ஆவது இடம் வரை பிடித்த உ.பி யோத்தாஸ், பாட்னா பைரேட்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. இதையடுத்து, புனே நகரில் இன்று (டிசம்பர் 26) நடக்கும் நாக் அவுட் போட்டிகளில் உ.பி. யோத்தாஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளும், பாட்னா பைரேட்ஸ் – யு மும்பா அணிகளும் களம் காண்கின்றன.
இதில் வெற்றி பெறும் இரு அணிகள், ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஹரியானா, டெல்லி அணிகளுடன் மோதுகின்றன. இரு செமிபைனல் ஆட்டங்களும் டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெறுகின்றன. இறுதிப் போட்டி ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு டிசம்பர் 29 ஆம் தேதி நடைபெறுகிறது.
புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியின் பயிற்சியாளர் மன்பிரீத் சிங் கூறுகையில், “முதன் முறையாக எங்கள் அணி புரோ கபடி கோப்பையை கைப்பற்ற காத்திருக்கிறது. ஒரு குடும்பம் மாதிரி எங்கள் அணி விளையாடுகிறது. எனது இளைய சகோதரர்கள் போலவே வீரர்களை நான் கருதுகிறேன். அரையிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது பெரும் ஊக்கத்தை கொடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
பிரியாணி, பிரியாணி, பிரியாணி… தமிழகத்தில் சந்தை மதிப்பு 10 ஆயிரம் கோடி!
பாத்திரமாகவே உருமாறும் வித்தையறிந்த பசுபதி… காத்திருக்கும் கதைகள்!