வழிநெடுக ஆயிரக்கணக்கான தொண்டர்கள்… வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி

Published On:

| By Minnambalam Login1

கேரளா வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி தொண்டர்களின் உற்சாகமான வரவேற்போடு பேரணியாக சென்று இன்று (அக்டோபர் 23)  வேட்புமனு தாக்கல் செய்தார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தின் ரே பரேலி மற்றும் கேரளா வயநாடு தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றார்.

தேர்தல் விதிமுறைகளின்படி  ஒரு எம்பி ஒரு தொகுதிக்கான பிரதிநிதி மட்டும்தான். இந்த விதிக்குட்பட்டு, ராகுல் காந்தி வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

இதனை தொடர்ந்து அவரது சகோதரியும்  காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இந்த தொகுதியின் இடைத்தேர்தல் வருகிற நவம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில்தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, கேரளாவுக்கு செல்வதற்கு முன்பாக பிரியங்கா காந்தியும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும் நேற்று(அக்டோபர் 22) மைசூருக்கு வந்தடைந்தனர். அவர்களை அங்குள்ள உள்ளூர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

பின்னர் அவர்கள் இருவரும் மைசூரிலிருந்த சில முன்னாள் ராணுவ வீரர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது ஒரு முன்னாள் ராணுவ வீரர், உடல் நலக்குறைப்பாட்டுடன் வயநாட்டில் இருக்கும் தனது அம்மா, எப்போதும் பிரியங்கா காந்தியின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்வார் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வயநாட்டுக்கு நேற்று இரவு சென்றடைந்த பிரியங்கா காந்தி, அந்த முன்னாள் ராணுவ வீரரின் அம்மா மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து சிறிது நேரம் உரையாடினார்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுனா கார்கேவும் இன்று(அக்டோபர் 23) காலை வயநாடு வந்தடைந்தனர். பின்னர் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் தனது வேட்புமனுவில் கையெழுத்திட்டார்.

தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக, ராகுல் காந்தி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பகெல், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் ஆகியோருடன் திறந்த வேனில் பிரியங்கா காந்தி பேரணியாகச் சென்றார்.

அவருக்கு வழிநெடுக காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வாழ்த்தி கோஷமிட்டு உற்சாக வரவேற்பளித்தனர்.

உண்மை, நீதி, சமத்துவம்

பேரணியின் முடிவில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி “எனக்கு 17 வயதாக இருந்தபோது, ​​1989-ல் எனது தந்தைக்காக முதன்முறையாக பிரச்சாரம் செய்தேன். தற்போது 35 வருடங்கள் கழித்து எனது அம்மா, என் சகோதரன் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலருக்காக பல்வேறு தேர்தல்களில் பிரச்சாரம் செய்துள்ளேன்.

ஆனால் எனக்கு நானே பிரச்சாரம் செய்வது இதுவே முதல் முறை. காங்கிரஸ் தலைவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வயநாடு வேட்பாளராக இந்த பாக்கியத்தை எனக்கு வழங்கியதற்காகவும், வயநாடு வேட்பாளராக என்னை ஆதரித்ததற்காகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் எனது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் உங்கள் பிரதிநிதியாக இருப்பதே எனக்கு பெருமை. சில மாதங்களுக்கு முன்பு, நான் என் சகோதரனுடன் சூரல்மலை மற்றும் முண்டக்கைக்கு சென்றிருந்தேன். நிலச்சரிவால் ஏற்பட்ட நாசத்தை என் கண்களால் பார்த்தேன். முழு குடும்பத்தையும் இழந்த குழந்தைகளைப் பார்த்தேன். குழந்தைகளை இழந்த தாய்மார்களை சந்தித்தேன். நிலச்சரிவினால் முழு வாழ்க்கையும் அடித்துச் செல்லப்பட்ட மக்களை நான் சந்தித்தேன்.

நான் கவனித்த ஒரு விஷயம். மருத்துவராக இருந்தாலும் சரி, ஆசிரியராக இருந்தாலும் சரி, இல்லத்தரசியாக இருந்தாலும் சரி, நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துள்ளனர் என்பதே.

எந்தவித பேராசையும் இன்றி முழுக்க முழுக்க கருணையுடன் அன்புடனும் பாசத்துடனும் ஒருவரையொருவர் தைரியமாக ஆதரித்துள்ளனர்.

உங்கள் சமூகத்தின் ஒரு அங்கமாக இருப்பதும், உங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக மாறுவதும் எனக்கு ஒரு பெரிய மரியாதை மற்றும் பாக்கியமாக இருக்கும்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகாரத்தில் தொடர்ந்து நீடிப்பதற்காக வெறுப்பு மற்றும் பிரிவினையை உருவாக்கினர். இது நமது தேசம் உருவாக்கப்பட்ட அரசியல் அல்ல.

மகாத்மா காந்தி  தலைமையிலான நமது சுதந்திர இயக்கம், அனைத்து மதங்களுக்கும் சமத்துவம் மற்றும் மரியாதை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டது.

இயேசு கிறிஸ்து மனத்தாழ்மையைப் பற்றி நமக்குக் கற்பிக்கிறார், நம் இதயங்களில் அன்பு இல்லாத இடத்தில் அது மதிப்புக்குரியது அல்ல என்று அவர் நமக்குக் கற்பிக்கிறார்.

புத்தரின் போதனைகள், அகிம்சையின் பாதையை நமக்குக் காட்டியது. இவை அனைத்தும் சேர்ந்து நமது தேசியத்தின் அடிப்படை மதிப்புகளாக அமைகின்றன.

இன்று நாம்  உண்மைக்காக, நீதிக்காக, சமத்துவத்திற்காக போராடுகிறோம். இந்த விழுமியங்கள் தான் இந்தியா முழுவதும் சுமார் 8,000 கிலோமீட்டர் தூரம் என் சகோதரனை நடக்கத் தூண்டியது.

உங்கள் ஆதரவு இல்லாமல் அவரால் அதைச் செய்திருக்க முடியாது. உலகமே அவருக்கு எதிராக இருந்தபோது, நீங்கள் என் சகோதரனுடன் நின்றீர்கள். தொடர்ந்து போராட உங்கள் பலத்தையும் தைரியத்தையும் அவருக்குக் கொடுத்தீர்கள். என் குடும்பம் முழுவதும் எப்போதும் உங்களுக்குக் கடமைப்பட்டு நன்றியுடன் இருக்கும்.

ராகுல்காந்தி உங்களை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும். ஆனால், நான் உங்களுக்கும் அவருக்கும் இடையில் பாலமாக இருப்பேன்.  நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகள் குறித்து எனக்கும் விளக்கினார். நான் உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் பிரச்சினைகள் என்ன என்பதைப் புரிந்து கொள்ள விரும்புகிறேன்” என பிரியங்கா காந்தி பேசினார்.

 

இதனை தொடர்ந்து அவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி மற்றும் தனது கணவர் வதேரா மற்றும் மகன் ஆகியோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த இடைத்தேர்தலில், அவருக்கு எதிராக பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் மற்றும் இடதுசாரி கூட்டணி சார்பில் சத்யன் மொகேரி ஆகியோர் போட்டியிடுகிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

சென்னை பெண்களுக்காக ‘பிங்க் ஆட்டோ’ : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

காமன்வெல்த் போட்டியில் ஹாக்கி நீக்கம்… பின்னணி என்ன?

ED ரெய்டு : வீட்டின் முன் குவிந்த ஆதரவாளர்கள்… கிளம்ப சொன்ன வைத்திலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share