எனது ’பாலிவுட் மோகன்லால்’ இவரே.. – பிரியதர்ஷன் சிலாகிப்பு!

Published On:

| By christopher

priyadharsan said he is my bollywood mohanlal

சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர்கள் என்று கே.பாலச்சந்தர், ராம.நாராயணன், தாசரி நாராயணராவ், ராகவேந்திர ராவ் என்று ஒரு சில இயக்குனர்களே ‘ஜாம்பவான்களாக’த் திரைப்பட வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர். அந்த வரிசையில் அடுத்ததாக இடம்பெறுவதற்கான வாய்ப்புகளைப் பெற்றவர்கள் மிகச்சிலரே. அதிலொருவராக விளங்குகிறார் இயக்குனர் பிரியதர்ஷன்.

மலையாளம், தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் இவர் 96 படங்களை இயக்கியிருக்கிறார். இறுதியாக இவர் இயக்கிய ‘அப்பத்தா’, 2023ஆம் ஆண்டு வெளியானது. இதனைத் தொடர்ந்து பூத் பங்களா, ஹைவான், ஹேரா பெர்ரி 3 படங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

ADVERTISEMENT

‘ஹைவான்’ படப்பிடிப்பு கடந்த வாரம் கேரளாவில் தொடங்கியது. இதன் படப்பிடிப்பில் சையீப் அலிகான், அக்‌ஷய் குமார் உடன் பிரியதர்ஷன் இருக்கும் புகைப்படமும் ‘வைரல்’ ஆனது.

மோகன்லாலை நாயகனாகக் கொண்டு பிரியதர்ஷன் இயக்கிய ‘ஒப்பம்’ படத்தின் ரீமேக் ‘ஹைவான்’ என்று சொல்லப்படுகிறது. மூலப்படத்தில் இருக்கிற காட்சிகளில், வசனங்களில் பல மாற்றங்களைச் செய்தபிறகே இதனை அவர் உருவாக்குவதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்தப் படத்தில் அக்‌ஷய்குமார் வில்லனாக நடிக்கிறாராம். இதனைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் தெரிவித்திருக்கிறார்.

“நம் எல்லோருக்குள்ளும் கொஞ்சம் சைத்தான் இருக்கிறது.. மேலிருந்து பார்க்கையில் புனிதமாகத் தெரிபவர்கள், கீழிருந்து நோக்கும்போது மிகமோசமானவர்களாகத் தெரிவார்கள்” என்று கூறியிருக்கிறார்.

ADVERTISEMENT

அது மட்டுமல்லாமல், தனக்கு மிகவும் பிடித்த இயக்குனரான பிரியதர்ஷன் உடன் இணைந்திருப்பதாகவும், சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சையீஃப் அலிகான் உடன் சேர்ந்து நடிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

மலையாளப் பட இயக்குனரான பிரியதர்ஷன் இயக்குகிற இந்திப் படங்களில் அக்‌ஷய்குமார் தவறாமல் இடம்பெற்றுவிடுவார் என்று ஒருகாலத்தில் சொல்லப்பட்டதுண்டு. அந்த அளவுக்கு, இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளனர்.

இது பற்றிய கேள்விக்கு, ‘அக்‌ஷய் குமார் தான் என்னோட பாலிவுட் மோகன்லால்’ என்றிருக்கிறார் பிரியதர்ஷன்.

இயக்குனர் ஆவதற்கு முன்னிருந்தே பிரியதர்ஷனின் நெருங்கிய நண்பராக விளங்குபவர் மோகன்லால். அவர் இயக்கிய முதல் படத்தின் நாயகனும் இவரே.

இருவரது கூட்டணியில் பல வெள்ளிவிழாப் படங்கள் ரசிகர்களுக்குக் கிடைத்திருக்கின்றன. அந்த வகையில், தனது 100வது படத்தில் நாயகனாக மோகன்லால் நடிப்பார் என்று ஏற்கனவே பிரியதர்ஷன் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது புரிகிறதா, அக்‌ஷய் குமாருக்குக் கிடைத்த பாராட்டு எவ்ளோ பெரியது என்று..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share