கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டார்களா என்று அறிக்கை அளிக்கும்படி சென்னை போலீஸ் மருத்துவத்துறையிடம் விளக்கம் கேட்டிருக்கிறது.
கால் முட்டி சவ்வு அறுவை சிகிச்சை செய்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா பரிதாபமாக இன்று (நவம்பர் 15) உயிரிழந்தார்.
மருத்துவர்களின் தவறான சிகிச்சையே இறப்புக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சிகிச்சையளித்த 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், பணியிடமாற்றமும் செய்யப்பட்டிருக்கின்றனர்.
பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வந்த சோமசுந்தர், எலும்பு முறிவுத்துறை உதவிப் பேராசிரியராக இருந்த பால்ராம் சங்கர் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மருத்துவர் சோமசுந்தரை விருதுநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றி மருத்துவக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவர் பால்ராம் சங்கரை தூத்துக்குடி மருத்துவக்கல்லூரிக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு சென்னை போலீஸ் கடிதம் அனுப்பியிருக்கிறது.
மருத்துவர்களின் அலட்சியப் போக்கினால் வீராங்கனை இறந்துள்ளாரா என்று அறிக்கை அளிக்கும்படி போலீஸ் கேட்டிருக்கிறது.
ஏற்கனவே மாணவி பிரியாவின் மரணம் குறித்து IPC 174 சந்தேக மரணம் (அ) இயற்கைக்கு மாறான மரணம் என பெரவள்ளூர் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
மருத்துவத் துறை கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கலை.ரா