தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் தனி செயலாளராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், துணை முதல்வரின் தனி செயலாளர் யார் என்று கேள்வி எழுந்தது.
இதுகுறித்து நமது மின்னம்பலத்தில் “துணை முதல்வரின் செயலாளர் பிரதீப் யாதவ்வா? அமுதாவா? கோட்டை ரேஸ்!” என்ற தலைப்பில் கடந்த 30ஆம் தேதி வெளியிட்ட செய்தியில் “விளையாட்டுத் துறை செயலாளராக இருக்கும் அதுல்ய மிஸ்ராவை துணை முதல்வரின் செயலாளராக நியமிக்க முதல்வருக்கு விருப்பமில்லை. அதேநேரம் பிரதீப் யாதவ் பெயர் தான் துணை முதல்வரின் செயலாளர் பதவிக்கு தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
முதல்வருக்கு நெருக்கமான சில அதிகாரிகள் திடீரென முன்னாள் உள்துறைச் செயலாளரும், இப்போதைய பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளருமான அமுதாவை துணை முதல்வரின் செயலாளராக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தோம்.
இந்தநிலையில் பிரதீப் யாதவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் தனி செயலாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
யார் இவர்?
பிரதீப் யாதவ் உத்தரப் பிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். டெல்லி ஐஐடியில் மேனேஜ்மெண்ட் மற்றும் சிஸ்டம்ஸ் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயின்ஸ் நிறுவனத்தில் பொது மேலாண்மை & நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.
1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஐ.ஏ.எஸ் பேட்ச் அதிகாரி ஆனார். இவரும் ஐஏஎஸ் அதிகாரியான தர்மேந்திர பிரதாப் யாதவும் சகலை. அதாவது இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா தங்கையை திருமணம் செய்துகொண்டவர்கள். இவரும் தற்போது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதீப் யாதவ் திண்டுக்கல் மாவட்டத்தில் தனது பணியை தொடங்கினார். வட ஆற்காடு மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றினார்.
2005ஆம் ஆண்டு தாய்லாந்து சென்ற பிரதீப் யாதவ் மனித வளமேம்பாடு குறித்து பயிற்சி பெற்றார்.
மு.க.அழகிரி மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக இருந்த போது, அவரது தனிச்செயலாளராக பிரதீப் யாதவ் இருந்தார்.
2014 முதல் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் பிரதீப் யாதவ் அதிமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இவர் பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இருந்த போதுதான் 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அது கைவிடப்பட்டது.
2018ல் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் புரட்டி எடுத்த போது தஞ்சை மாவட்ட பேரிடர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு களத்தில் இறங்கி செயல்பட்டார்.
தொடர்ந்து, கைத்தறி மற்றும் காதி துறையின் முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி மின்சாரத் துறையை வகித்தபோது, பிரதீப் யாதவுக்கு மின்சாரம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் நிர்வாக இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போது பிரதீப் யாதவ் உடனடியாக பதவி ஏற்காமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மின் வாரியத்துக்கு மின்சாரம் விநியோகம் செய்த தனியார் நிறுவனங்களுக்கு உரிய பணம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அப்போது இந்த பொறுப்பை ஏற்றால் சிக்கலாகிவிடுமோ என்ற எண்ணத்தில் பிரதீப் யாதவ் பதவி ஏற்கவில்லை என்று சொல்லப்பட்டது.
2022 டிசம்பர் மாதம் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அந்தஸ்து வழங்கி கூடுதல் தலைமை செயலாளராக பதவி உயர்வு அளித்து அப்போதைய தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டார். அதில் ஒருவராக பிரதீப் யாதவ் இருந்தார்.
2022 ஜூன் மாதம் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தார். 2023ல் இவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கல்வி துறை சார்ந்த பண பலன் கோரி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஞானபிரகாஷம் தொடர்ந்த வழக்கில், மெத்தனமாக செயல்பட்டதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்தது.
“நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற பலமுறை வாய்ப்புகள் வழங்கியும் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை. நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஒரு அதிகாரியையாவது சிறைக்கு அனுப்பினால் தான் சரியாக இருக்கும். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு அதற்கு எதிரான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபடுவதை ஏற்க முடியாது” என்று தெரிவித்த நீதிமன்றம், மூத்த ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகளுக்கு சிறை தண்டனை விதித்தது.
பின்னர் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ததால் இந்த உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது.
வருவாய்த்துறை, தொழில்துறை, கிராமப்புற மேலாண்மை, நில வருவாய் மேலாண்மை, சமூக நீதி மற்றும் மனித வள மேம்பாடு, நிதித்துறை, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் மேலாண் இயக்குநர், மின்சாரம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் நிர்வாக இயக்குநர், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, உணவுத் துறை செயலாளர் என பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.
தற்போது உயர்க்கல்வித் துறை செயலாளராக பணியாற்றி வந்த பிரதீப் யாதவ் துணை முதல்வர் உதயநிதியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2016 சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. தேர்தல் முடிவுகளுக்கு முன்பே கலைஞர் முதல்வரானால் யார் செயலாளர் என்ற விவாதத்தில் பிரதீப் யாதவ் பெயர் முதலிடத்தில் இருந்தது.ஆனால், அந்த தேர்தலில் திமுக 100 இடங்களில் வெற்றி பெற்று பலமான எதிர்க்கட்சியாகவே அமர முடிந்தது. தாத்தாவுக்கு செயலாளராக ஆலோசிக்கப்பட்டவர் இன்று பேரனுக்கு தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஈரானிடம் அணுகுண்டு உள்ளதா? உலக நாடுகள் அச்சம்!
தமிழக மீனவர்கள் கைது… இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் பாமக
விசிக மது ஒழிப்பு மாநாட்டிற்கு அமமுக ஆதரவு!
டேட்டிங் செல்ல விடுமுறை; சம்பளமும் உண்டு… எங்கு தெரியுமா?