முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் இணைக்கப்படும் தனியார் மருத்துவமனைகள்!

Published On:

| By Kavi

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டால் அரசு மகப்பேறு சேவைகளில் பின்னடைவு ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் (எம்ஆர்எம்பிஎஸ்) கீழ் தனியார் மருத்துவமனைகளை இணைக்கும் நடைமுறையை சுகாதாரத் துறை தொடங்கியுள்ளது.

முத்துலட்சுமி மகப்பேறு உதவித்திட்டம் 2017 வரை அரசு மருத்துவமனைகளில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், அதன்பிறகு, தனியார் மருத்துவ மருத்துவமனைகளில் இலவச மருத்துவச் சேவைகளைப் பெறுபவர்களுக்கும் இந்தத் திட்டத்தை நீட்டிக்க அரசு ஒப்புதல் அளித்தது.

இந்த திட்டத்தில் 18,000 ரூபாய் ரொக்கமும், ஊட்டச்சத்து பொருட்களுடன் கூடிய 2 பெட்டகங்களும் வழங்கப்படும். அதன்படி இதுவரை 10,841 கோடி ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்பர சுகாதார நிலையங்களில் தங்களின் ஆதார் அட்டை மற்றும் வங்கி விவரங்களை கொடுத்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி பெண்கள், 40 சதவிகிதத்துக்கும் மேல் உடல் குறைபாடு உள்ள பெண்கள், மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள், ஆண்டுக்கு 8 லட்சத்துக்கும் கீழ் வருமானம் கொண்ட குடும்ப பெண்கள் இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.

இந்தநிலையில் பொது சுகாதார இயக்குநரகம், இத்திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளை இணைக்கும் பணியை மேற்கொள்ள மாவட்ட அதிகாரிகளுக்கு கூறியுள்ளது.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளும் நிதியுதவி மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்களை பெற முடியும்.

இந்த முடிவு கர்ப்பிணிப் பெண்களுக்கு எங்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும் பாதுகாப்பான பிரசவத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும் அரசு மகப்பேறு சேவைகளில் பின்னடைவு ஏற்படும் என்று மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.

“இந்த திட்டத்தின் கீழ் தனியார் தனியார் மருத்துவமனைகளை கொண்டு வர அந்த மருத்துவமனைக்கு போதுமான வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்யுமாறு மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு கர்ப்பிணி பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையை தேர்ந்தெடுப்பதற்கு இத்திட்டம் ஒரு காரணமாக உள்ளது.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு பணம் செலுத்த வசதி உள்ளவர்களுக்கு அரசாங்கம் ஏன் நிதி உதவி வழங்க வேண்டும்?
இந்த திட்டம் நிச்சயம் அரசு மருத்துவமனைகளில் பிரசவ எண்ணிக்கையை குறைக்கும்” என்றும் டாக்டர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் ‘தி இந்து’விடம் கூறுகையில், “தற்போது, ​​60% கர்ப்பிணிப் பெண்கள் அரசுத் துறையிலும், 40% பேர் தனியார் துறையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அனைத்து பெண்களும் பணக்காரர்கள் அல்ல. நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்களும் தனியார் மருத்துவமனைக்குச் செல்கின்றனர்.

எனவே அவர்களுக்காக இந்த திட்டத்தை தனியார் மருத்துவமனைகளுடன் இணைக்க திட்டமிட்டுள்ளோம். இதன் நோக்கமே ஒரு தாயை பாதுகாப்பதுதான். மாறாக அவர் எங்கு சிகிச்சை பெறுகிறார் என்பதல்ல. மகப்பேறு இறப்புகள் ஏற்படக்கூடாது என்பதே இதன் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஹேமா கமிஷன் அறிக்கை : உடைத்து பேசிய ஊர்வசி

10 மாநிலங்களில் 12 தொழில் நகரங்கள் : உபிக்கு இரண்டு – தமிழகத்தில்?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share