பிரதமருக்கான பொருளாதார அறிவுரைக் குழு: விமர்சித்தவர்கள் நீக்கம்!

Published On:

| By Balaji

பொருளாதார விவகாரங்களில் பிரதமருக்கு ஆலோசனை வழங்கும், ’பிரதமருக்கான பொருளாதார அறிவுரைக் குழு’வை மத்திய அரசு நேற்று (செப்டம்பர் 25) மாற்றி அமைத்துள்ளது.

இதன்படி இப்போது இக்குழுவின் தலைவராக இருக்கும் டாக்டர் பிபேக் தேப்ராய் இதே பதவியில் தொடர்கிறார். இந்தக் குழுவின் உறுப்பினர் செயலாளராக இருக்கும் ரத்தன் வாட்டல் என்பவரும் தொடர்கிறார். இந்த இரு முழுநேர உறுப்பினர்களை தவிர இரண்டு புதிய பகுதி நேர உறுப்பினர்கள் இக்குழுவில் இடம் பெறுகிறார்கள். டாக்டர் ஆஷிமா கோயல் பகுதி நேர உறுப்பினராக தொடர்கிறார். அதேநேரம் டாக்டர் சஜித் சினாய் புதிய பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

நேற்றைய மாற்றத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த ரத்தின் ராய், ஷாமிகா ரவி ஆகியோர் குழுவில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

தேசிய பொது நிதிக் கொள்கை நிலையத்தின் இயக்குனராக இருக்கும் ரத்தின் ராய் கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் பற்றி ஆழ்ந்த கவலை தெரிவித்து வந்தார். நிர்மலா சீதாராமன் அளித்த பட்ஜெட் பற்றியும் பல மாற்றுக் கருத்துகளை முன் வைத்து வந்தார்.

ADVERTISEMENT

இதேபோல குழுவின் உறுப்பினராக இருந்த ஷாமிகா ரவி தொடர்ந்து பல ட்விட்டர் பதிவுகளில் முன்னாள் நிதி அமைச்சரும், குடியரசுத்தலைவராக இருந்தவருமான பிரணாப் முகர்ஜியின் பொருளாதார முடிவுகள் தொடங்கி இப்போதைய முடிவுகள் வரை பல்வேறு விமர்சனங்களை வைத்து வந்தார்.இந்த நிலையில்தான் பிரதமருக்கான பொருளாதார அறிவுரைக் குழு மாற்றி அமைக்கப்பட்டு அரசின் பொருளாதார முடிவுகளை ஆக்கப்பூர்வமாக விமர்சித்த இந்த இருவரும் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

நாட்டின் பொருளாதார நிலைமை பற்றி பல்வேறு பொருளாதார அறிஞர்களும் தொழிலதிபர்களும் வணிகர்களும் கவலை வெளியிட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி, ‘இந்தியாவில் அனைவரும் சௌக்கியம்’ என்று சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் ஹூஸ்டனில் பேசினார்.இந்நிலையில் இந்த இரு பொருளாதார அறிஞர்களும் பிரதமருக்கான பொருளாதார அறிவுரை குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share