நான் பயாலஜிக்கல் ரீதியாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் காரணமாக பிரதமர் மோடி ஒடிசா, உத்தரப் பிரதேசம், டெல்லி என சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசும் பேச்சும், அவர் ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டியும் சமீப நாட்களாக பேசுபொருளாகியுள்ளது.
இந்தநிலையில் நியூஸ் 18 இந்தி சேனலுக்கு பிரதமர் மோடி நேற்று பேட்டி அளித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அளித்த பேட்டியின் போது, ‘நீங்கள் அதிக ஆற்றல் மிக்கவராக இருக்கிறீர்கள்? அதிக பேரணிகளில் கலந்துகொள்கிறீர்கள்… அதிக நேரம் உழைக்கிறீர்கள்.. நீங்கள் சோர்வடைவதே இல்லையா” என பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பிரதமர் மோடி அளித்த பதில் இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.
அவர் கூறுகையில், “என் அம்மா உயிருடன் இருந்தவரை நான் உயிரியல் ரீதியாக பிறந்திருக்கலாம் என்று நினைத்தேன். அம்மா இறந்த பிறகு நடந்த அனுபவங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது நான் நினைத்தது தவறு என்று தோன்றுகிறது.
கடவுள் என்னை அனுப்பினார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த ஆற்றல் உயிரியியல் ரீதியாக பெறப்படவில்லை. சில வேலைகளை செய்ய சொல்லி கடவுள் என்னை அனுப்பியிருக்கிறார் என தோன்றுகிறது. அதனால் நான் பயாலஜிக்கல் ரீதியாக பிறந்திருக்க வாய்ப்பில்லை.
கடவுள் எனக்கு நல்ல ஒழுக்கத்தை, வலிமையை, இதயத்தை கொடுத்து எனக்கு உத்வேகத்தையும் அளித்துள்ளார். கடவுள் என்னை அனுப்பினாலும் நான் அவரை பார்த்ததில்லை.
ஏனென்றால் நான் ஒரு பக்தன். 140 கோடி நாட்டு மக்களையும் கடவுளின் வடிவமாக பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
முன்னதாக ஒடிசாவைச் சேர்ந்த பாஜக மூத்த நிர்வாகி சம்பித் பத்ரா, கடவுள் பூரி ஜெகநாதர் பிரதமர் மோடியின் பக்தர் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் கடவுள் என்னை அனுப்பிருக்கிறார், பயாலஜிக்கல் ரீதியாக பிறக்கவில்லை என்று மோடி கூறியுள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…