மன் கி பாத் நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிறான இன்று (செப்டம்பர் 24) 105ஆவது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
“எனக்குக் கிடைக்கும் கடிதங்களில் இப்போதெல்லாம் இரண்டு விஷயங்கள் மிக அதிகம் காணப்படுகின்றன. அதில் இன்று சந்திரயான் 3 திட்டம், மற்றொன்று ஜி20 மாநாடு” என்றார்.
தொடர்ந்து அவர், “உயிர்களிடத்தில் கருணையோடு நடக்க வேண்டும், அவற்றை நமது நண்பர்களாகக் கொள்ள வேண்டும். பெரும்பாலான நமது தெய்வங்களின் வாகனங்களே கூட விலங்குகள்-பறவைகள் தாமே. பலர் கோயில்களுக்குச் செல்கிறார்கள்,
பகவானை சேவிக்கிறார்கள் என்றாலும், தெய்வங்களின் வாகனங்களின்பால் அவர்களின் கவனம் அதிகம் செல்வதில்லை. இந்த உயிரினங்கள் நமது நம்பிக்கையின் மையத்தில் அவசியம் இருக்க வேண்டும், தேவையான அனைத்து வகைகளிலும் நாம் இவற்றைப் பாதுகாக்க வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளில், தேசத்தில், சிங்கம், புலி, சிறுத்தை, யானை ஆகியவற்றின் எண்ணிக்கை உற்சாகம் அளிக்கும் வகையில் அதிகரித்திருக்கிறது. மேலும் நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன; இவற்றால் இந்த மண்ணில் வசிக்கின்ற பிற உயிரினங்களும் காக்கப்பட வேண்டும்.
இப்படிப்பட்ட ஒரு அலாதியான முயற்சி, ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் செய்யப்பட்டு வருகிறது. இங்கே சுக்தேவ் பட் அவர்களும் அவருடைய குழுவினரும் இணைந்து வன விலங்குகளைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள்;
இவர்களுடைய அணியின் பெயர் என்ன தெரியுமா? இவர்களுடைய அணியின் பெயர் கோப்ரா. ஏன் இந்த ஆபத்தான பெயர் என்றால், இவர்களுடைய அணியானது இந்தப் பகுதியின் பயங்கரமான நாகங்களை மீட்கும் பணியையும் புரிகிறது. இந்த அணியில் அதிக எண்ணிக்கையில் மக்கள் இணைந்திருக்கிறார்கள்.
இவர்களை ஒரு முறை தொலைபேசியில் அழைத்தால் போதும், அழைத்த இடத்திற்குச் சென்று விடுகிறார்கள், தங்கள் குறிக்கோளில் இறங்கி விடுகிறார்கள். சுக்தேவ் அவர்களின் இந்த அணியானது இதுவரை 30,000த்திற்கும் மேற்பட்ட விஷப்பாம்புகளின் உயிர்களைக் காப்பாற்றி இருக்கின்றார்கள். இந்த முயற்சி காரணமாக மனிதர்களின் அபாயம் நீங்கிய அதே வேளையில், இயற்கையும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இந்த அணியானது பிற நோய்வாய்ப்பட்ட உயிரினங்களுக்கும் சேவை புரியும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் சென்னையில் ஒரு ஆட்டோ ஓட்டுநரான எம். ராஜேந்திர பிரசாத்தும் இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் கடந்த 25-30 ஆண்டுகளாகவே புறாக்களுக்குச் சேவை புரிவதில் ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய வீட்டிலேயே கூட 200க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்க்கிறார். அதே வேளையில் பறவைகளுக்கு உணவு, நீர், ஆரோக்கியம் போன்ற அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துகிறார்.
இதற்காக கணிசமான பணம் இவருக்குச் செலவாகிறது என்றாலும், தனது சேவையில் இவர் உறுதியாக இருக்கிறார். இதுபோன்ற நோக்கம் கொண்ட மக்களின் பணியைக் காணும் போது உண்மையிலேயே மிகவும் நிம்மதி ஏற்படுகிறது, மிகவும் சந்தோஷம் உண்டாகிறது. உங்களிடத்திலும் இப்படிப்பட்ட முயற்சிகள் குறித்த தகவல் இருந்தால் அவற்றைக் கண்டிப்பாகப் பகிருங்கள்” என்று கூறினார்.
“இந்தியாவில் பண்டிகைக்காலம் தொடங்கி விட்டது. உங்கள் அனைவரின் வீடுகளிலும் புதிதாக ஏதாவது வாங்கும் திட்டம் தீட்டியிருப்பீர்கள். சிலர் நவராத்திரிக்காலத்தில், தங்கள் புதிய பணியைத் தொடங்கலாம் என்று காத்திருக்கலாம்.
உற்சாகம், உல்லாசம் நிரம்பிய சூழலில் நீங்கள் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தை அவசியம் நினைவில் நிறுத்திச் செயலாற்றுங்கள். நீங்கள், பாரதத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துங்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கே உங்கள் ஆதரவு அமைய வேண்டும். உங்களின் சிறிய சந்தோஷமானது, வேறு ஒருவருடைய குடும்பத்துக்கு மிகப்பெரிய சந்தோஷ காரணியாக ஆகலாம்.
நீங்கள் பாரத நாட்டுப் பொருட்களை வாங்கும் போது இதன் நேரடி தாக்கமும் ஆதாயமும், நமது உழைப்பாளர்கள், நமது கைவினைஞர்கள், கலைஞர்கள், பிற விச்வகர்மா சகோதர சகோதரிகளுக்குக் கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில் தொடக்கநிலைத் தொழில்களான பல ஸ்டார்ட் அப்புகளும் கூட உள்ளூர்ப் பொருட்களுக்கு ஊக்கமளித்து வருகின்றன. நீங்கள் உள்ளூர் பொருட்களை வாங்கினால், ஸ்டார்ட் அப்புகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் ஆதாயம் உண்டாகும்” என்றார்.
“இன்றைய உலகம் டிஜிட்டல் தொழில்நுட்பம், மின்னணுப் புத்தகங்களுடையது என்பது உண்மை தான் என்றாலும், புத்தகங்கள் நமது வாழ்க்கையில் என்றுமே ஒரு நல்ல நண்பன் என்ற பங்களிப்பை ஆற்றி வருகின்றன. ஆகையால், புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தினை நாம் குழந்தைகளிடத்திலே ஊக்கப்படுத்த வேண்டும்” என்றும் அறிவுரை வழங்கினார்.
பிரியா
மாதம் ரூ.1000… குளறுபடி, அலைக்கழிக்கப்படும் பெண்கள்: அரசு கவனிக்குமா?