திருப்பரங்குன்றத்தில் நாளை சாமி தரிசனம் செய்யும் பிரதமர் மோடியின் பயண விபரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Modi

தமிழகத்தில் அடுத்த சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 28) சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகிறார்.

தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் மதுராந்தகத்தில் ஜனவரி மாதம் நடைபெற்றது. தற்போது 2-வது கட்டமாக நாளை மார்ச் 1-ந் தேதி புதுச்சேரி, மதுரை என 2 இடங்களில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இதற்காக இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் அவர், நாளை காலை புதுச்சேரி செல்கிறார்.

ADVERTISEMENT

புதுச்சேரியில் நாளை காலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் சிறப்புரை ஆற்றுகிறார். அதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் தஞ்சாவூர் விமானப்படை தளத்திற்கு சென்று, அங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க உள்ளார். பின்னர் சிறப்பு விமானம் மூலம் மதுரை செல்கிறார்.

மதுரையில் பிரதமர் மோடிக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு புதிய வான் கட்டுப்பாட்டு கோபுரத்தை திறந்து வைக்கிறார். மேலும், காணொளி வாயிலாக தமிழகத்தில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களையும் திறந்து வைக்க உள்ளார். பரமக்குடி–ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

ADVERTISEMENT

இதையடுத்து, மாலை 4 மணி அளவில் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயில் சென்று சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து மாலை 4.30 மணி அளவில் மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் சுமார் 170 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் வருகை காரணமாக மாவட்ட எல்லைக்குள் நாளை டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share