தமிழகத்திற்கான திட்டங்கள் குறித்து பலமுறை முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை வைத்தும் எதையும் அவர் நிறைவேற்றி தந்தது இல்லை என்று திமுக துணை பொதுச்செயலாளரும் எம். பி. யுமான கனிமொழி கூறியுள்ளார்
தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 28) தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் “தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. இனி தமிழகத்தில் திமுக இருக்காது. அக்கட்சி அகற்றப்படப்படும். காங்கிரஸ் காலத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் எல்லாம் இப்போதுதான் நிறைவேற்றப்பட்டு வருகிறது” என திமுகவையும் காங்கிரசையும் விமர்சித்தார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் திமுக எம்பி கனிமொழி.
மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் திமுக அரசு அதை தடுக்கப் பார்க்கிறது என்று பிரதமர் மோடி கூறியது பற்றி கனிமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
“அவர்கள் என்ன திட்டத்தை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. தேர்தல் வரக்கூடிய இந்த சூழலில் சில திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பிரதமரை சந்திக்கும் போது தமிழகத்துக்கான திட்டங்கள் குறித்து முதல்வர் கோரிக்கை வைப்பார்.
ஆனால் இதுவரை அவர் எதையுமே நிறைவேற்றி கொடுத்தது இல்லை. சமீபத்தில் ஏற்பட்ட புயல் மழை வெள்ள பாதிப்புக்கு நிவாரணம் கேட்டோம். அதற்கான பணத்தை கூட இதுவரை தரவில்லை.
இதுதான் தற்போதைய நிலை. நல்ல திட்டங்கள் கொண்டு வரும்போது தமிழ்நாடு அரசு எந்த காலத்திலும் தடுப்பது இல்லை.
பேப்பர் விளம்பரத்தில் தேசிய கொடி கூட போடவில்லை. இதுதான் திமுகவுக்கு நாட்டு மேல் இருக்கும் பற்று என்று பிரதமர் மோடி விமர்சித்திருக்கிறாரே?
இந்தியாவில் விளம்பரத்துக்காக அதிகமாக செலவழிக்க கூடிய கட்சி பாஜக. அவர்கள் விளம்பரத்தில் கூட தேசிய கொடியை போடுவதை நான் அவ்வளவாக பார்த்தது இல்லை.
மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர் ஒட்டப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளதே?
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தை எடுத்துக் கொண்டால், இதற்காக மத்திய அரசு கால்வாசி பணம்தான் கொடுக்கிறது. மீத பணத்தை தமிழ்நாடு அரசு தான் கொடுக்கிறது. அவர்கள் கொடுக்கும் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்துக் கொண்டு எந்த வீட்டையும் கட்ட முடியாது. முக்கால்வாசி பணத்தை தமிழ்நாடு அரசு கொடுக்கும்போது அதற்கு பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் என்று ஸ்டிக்கர் ஒட்டுவது பாஜக தான்.
பல மாநிலங்களில் இருந்து எம்.பி.க்கள் இங்கு வரும் போது, இந்த திட்டத்துக்கு ஏன் முதல்வரின் வீடு வழங்கும் திட்டம் என வைக்கவில்லை என்று கேட்கிறார்கள். Kanimozhi reply to PM Modi
திமுக என்ற கட்சியே தமிழ்நாட்டில் இருக்காது என்று பிரதமர் சொல்லியிருக்கிறாரே?
இப்படி சொன்ன நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் தான் காணாமல் போயிருக்கிறார்கள். திமுக அப்படியேதான் இருக்கிறது.
பாஜக மீது தமிழக மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த தேர்தலில் திமுகவினர் அகற்றப்படுவார்கள் என்று சொல்லியிருக்கிறாரே?
வரக் கூடிய தேர்தலில் அவர்கள் நம்பிக்கை எப்படி இருக்கிறது என தெளிவாக தெரியும்.
குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் என்பது திமுகவின் நீண்ட நாள் கோரிக்கை என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், இந்தத் திட்டத்தை நாங்கள் தான் கொண்டு வந்திருக்கிறோம். இது எங்களுடைய திட்டம் என்று பாஜக சொல்கிறதே?
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது இந்த திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கலைஞர் முதல்வராக இருந்த போது கடிதம் எழுதி இருக்கிறார். அதன் பிறகு தொடர்ந்து திமுக இந்த கோரிக்கையை வலியுறுத்தி வந்தது. நானும் மக்களவையில் பேசி இருக்கிறேன். அமைச்சர்களை சந்தித்துள்ளேன். பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன்.
அதுமட்டுமல்லாமல் இந்த திட்டத்திற்கு நிலத்தை சீக்கிரமாக வழங்க வேண்டும் என்று அதற்கான வேலையை முதல்வர் தான் துரிதப்படுத்தி அவ்விடத்தை தந்திருக்கிறார்.
இந்த பட்ஜெட்டிலும் ராக்கெட் ஏவுதளத்துக்கான தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்காக 2000 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசு செய்திருக்கிறது.
பேப்பர் விளம்பரத்தில் சீன கொடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
ஆர்ட் வொர்க் செய்தவர்கள் இதை எடுத்து போட்டிருக்கிறார்கள். சீனா அதிபர் இங்கு வந்தபோது பிரதமர் அவரை வரவேற்று மகாபலிபுரத்தில் இருவரும் வாக்கிங் போனார்கள். அப்படி இருக்கக்கூடிய சூழலில் சீனாவை எதிரி நாடு என்று யாரும் அறிவிக்கவில்லை.
அழைப்பிதழில் முதலில் உங்கள் பெயர் போடவில்லை. அதன் பிறகு போட்டிருக்கிறார்கள். இது பற்றி…
பெயர் போடவில்லை என்பது தெரியும். சேர்த்தது எனக்கு தெரியாது.
புது அழைப்பிதழில் உங்கள் பெயர் போட்டிருக்கிறார்கள். அமைச்சர் கீதா ஜீவன் பெயர் போடவில்லை. இது பற்றி…
தமிழ்நாட்டின் மூத்த அமைச்சர் எ. வ. வேலு கூட இவ்விழாவில் கலந்து கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நான் கலந்து கொண்டேன். எங்கள் பெயரை கூட சொல்வதற்கு பிரதமருக்கு மனமில்லை. ஆனால் இன்று கொண்டு வந்த திட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கும் உரிமை இருக்கிறது.
கலைஞரின் கனவுத் திட்டம் இது. அதனால் நாங்கள் கலந்து கொண்டோம்.
அவர்களுக்கு தெரிந்த நாகரிகம் அவ்வளவுதான். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படுவதாக இல்லை.
தமிழக மக்கள் பாஜக பக்கம் வரத் தொடங்கி இருக்கிறார்கள். பாஜகவின் சித்தாந்தங்கள் தமிழக மக்களோடு ஒத்துப் போகிறது என்று சொல்கிறார்களே?
பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. பெரும்பான்மை மக்களை அரசியலுக்காக பாஜக பயன்படுத்துகிறது என்று தமிழக மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அரசியல் வேறு மதம் வேறு என்பதை தெளிவாக உணர்ந்தவர்கள் தமிழக மக்கள்.
ராமர் கோயில் விவகாரத்தில் திமுக எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது பற்றி சொல்லியிருக்கிறார்களே?
அயோத்தியில் கோயில் கட்டியதில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இதை அரசாங்கத்தின் சாதனையாக எப்படி சொல்ல முடியும். இது ஒரு அறக்கட்டளை கட்டிய கோயில்.
நாங்கள் கோயிலுக்கு எதிராக வெளிநடப்பு செய்யவில்லை. இவர்கள் பேசக்கூடிய பல்வேறு விஷயங்களை எதிர்த்து தான் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
காங்கிரஸ் ஆட்சியில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் எல்லாம் நான் தான் நிறைவேற்றி வருகிறேன் என்று பிரதமர் கூறியிருக்கிறாரே?
எத்தனை கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்று கணக்கெடுத்து பாருங்கள்
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ராஜினாமா?
”சம்பவம் உறுதி” : ‘ஜெயிலர் 2’ கதையில் நெல்சன் வைத்த ட்விஸ்ட்!
திமுக விளம்பரத்தில் சீனா கொடி: பிரதமர் மோடி காட்டம்!
கோடை விடுமுறையை குறிவைக்கும் சந்தானம்
Kanimozhi reply to PM Modi
Comments are closed.