பெரியகுளம் கோவில் பூசாரி தற்கொலை வழக்கில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா இன்று (நவம்பர் 13) விடுதலை செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகமுத்து (வயது 22). இவர் கைலாசப்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவில் பூசாரியாக இருந்து வந்தார்.
கோவிலில் கடை ஒதுக்குவது தொடர்பாக இவருக்கும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பியுமான ஓ.ராஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி நாகமுத்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
தனது உயிரை மாய்த்துக்கொள்ளத் தூண்டி விட்டதாக நாகமுத்து எழுதி வைத்திருந்த கடிதத்தின் அடிப்படையில் கோவில் அறங்காவலராகவும் பெரியகுளம் முன்னாள் நகரமன்றத் தலைவராகவும் இருந்த ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உட்பட 7 பேர் மீது பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் உத்தரவுப்படி, கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்றபோதே பாண்டி என்பவர் இறந்துவிட்டார்.
எனினும் ஓ.ராஜா, மணிமாறன், சிவக்குமார், ஞானம், லோகு, சரவணன் ஆகிய 6 பேர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அவர்கள் அனைவர் நிபந்தனையற்ற ஜாமீன் பெற்ற நிலையில் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர்.
இந்த வழக்கில் 23 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டது. அரசுத் தரப்பின் இறுதிக் கட்ட வாதத்துக்காக ஒத்திவைக்கப்பட்டு இருந்த இந்த வழக்கு விசாரணையின்போது மூவர் மட்டும் நீதிபதி முரளிதரன் முன்பு ஆஜராகினர். அப்போது ஓ.ராஜா உட்பட மூவர் ஆஜராகாத நிலையில் இறுதிக் கட்ட விசாரணை முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு நவம்பர் 13ஆம் தேதி இன்று வழங்குவதாக கூறி மேலும் குற்றம் சாட்டப்பட்ட ஓ.ராஜா உட்பட அனைவரும் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், சாட்சியங்கள் அனைத்தும் முறையாக நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்து ஓ.ராஜா உட்பட குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரையும் விடுவித்து நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
114 அடி உயரத்தில் வளர்ந்து நிற்கும் பிரமாண்ட சேவல்… என்ன காரணம்?