சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று (பிப்ரவரி 1) ரூ.50 வரை உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் ரூ.160 வரை உயர்ந்துள்ளது.
இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை வீட்டு பயன்பாட்டிற்கு 14.2 கிலோ எடையிலும், வணிகப் பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்து வருகின்றன. இந்நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ப மாதாந்திர அடிப்படையில் சிலிண்டர் விலையில் மாற்றங்கள் செய்து வருகின்றன.
அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நாளான இன்று வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.50 வரை உயர்ந்துள்ளது. இதனால், சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.1,899.50-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் வீட்டுஉபயோக சிலிண்டர் ரூ.868.50-க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த மாதம் அதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ச்சியாக வணிக சிலிண்டர் விலை உயர்ந்து வருவது வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சிறு உணவகங்கள் நடத்துபவர்களுக்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
