தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தக்காளி விலை மொத்த விலையில் ரூ.80 வரை அதிரடியாக உயர்ந்துள்ளது.
சமையல் என்றாலே வெங்காயம் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அதிகம் பயன்படுகிறது. குறிப்பாக இந்திய சமையல்களில் சைவம், அசைவம் என எந்த சமையலாக இருந்தாலும் தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு உள்ளிட்ட பொருட்கள் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.
காலத்திற்கு ஏற்றது போல் தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலை ஏற்ற இறக்கங்களை சந்திக்கிறது. தற்போது மழைக்காலம் என்பதால் தக்காளியின் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் தக்காளியின் விலை அதிரடியாக உயரத் தொடங்கி உள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 15க்கு விற்கப்பட்டது. நவம்பர் மாத தொடக்கத்தில் அதிகபட்சமாக ரூ.20 ஆக உயர்ந்தது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை விலையில் ரூபாய் 100 வரை விற்பனை செய்யப்படுவது இல்லத்தரசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் பெரிய வெங்காயத்தின் விலை கடந்த வாரம் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் பிற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கார்த்திகை மாதத்தில் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பதால் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட அனைத்து பச்சை காய்கறிகளின் தேவை கணிசமாக உயர்கிறது. அதேசமயம் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காய்கறிகளின் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதுவே தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்து வருவதற்கான காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
