புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்ய காந்த்தை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!

Published On:

| By Kavi

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, நீதிபதி சூர்ய காந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (அக்டோபர் 30) பிறப்பித்துள்ளார்.

தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் வரும் நவம்பர் 23ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் புதிய தலைமை நீதிபதியாக தனக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நீதிபதி சூர்ய காந்த்தை பரிந்துரைத்தார்.

ADVERTISEMENT

இந்த பரிந்துரையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய நிலையில் இன்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நீதிபதி சூர்ய காந்த், ஹரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பெட்வார் என்ற சிறிய கிராமத்தில் 1962 பிப்ரவரி 10 அன்று ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார்.

ADVERTISEMENT

எளிமையான பின்னணியிலிருந்து வந்தவர்.

1981 இல் ஹிசாரில் உள்ள அரசு முதுகலை கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், 1984 இல் ரோத்தக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டம் பயின்றார். பின்னர், 2011 இல் குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் சட்டத்தில் முதுகலைப் பட்டத்தையும் முதல் வகுப்பில் பெற்றார்.

ADVERTISEMENT

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். அரசியலமைப்பு, சேவை மற்றும் சிவில் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், பல பல்கலைக்கழகங்கள், வாரியங்கள், நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் சார்ந்த வழக்குகளில் ஆஜரானார். ஜூலை 7, 2000 அன்று ஹரியானாவின் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட பெருமையைப் பெற்றார். மேலும், மார்ச் 2001 இல் மூத்த வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார்.

நீதிபதி சூர்ய காந்தின் நீதிபதிப் பணி 2004 ஜனவரி 9 அன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டதில் தொடங்கியது. அங்கு 14 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார். பின்னர், 2018 அக்டோபர் 5 அன்று இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். அவரது அனுபவமும் திறமையும் அவரை மேலும் உயர்த்தியது. 2019 மே 24 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி ஏற்றார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக, நீதிபதி சூர்ய காந்த் பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கிய அமர்வுகளில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கத்தை உறுதிசெய்த 2023 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் இவரும் ஒரு அங்கமாக இருந்தார்.

பாதுகாப்புப் படைகளுக்கான ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ (OROP) திட்டத்தை உறுதி செய்தது, உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் உட்பட பார் அசோசியேஷன்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்குமாறு உத்தரவிட்டது, பெகாசஸ் உளவு மென்பொருள் வழக்கு, பிரதமரின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு மீறல் தொடர்பான விசாரணைக் குழு நியமனம் போன்ற முக்கிய வழக்குகளிலும் அவர் பங்களித்துள்ளார்.

நீதிபதி சூர்யா காந்த், 2025 நவம்பர் 24 அன்று இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்று, 2027 பிப்ரவரி 9 வரை சுமார் 14 மாதங்கள் இந்தப் பதவியில் நீடிப்பார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65 ஆகும். ஹரியானா மாநிலத்திலிருந்து தலைமை நீதிபதி பதவிக்கு வரும் முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share