நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். Waqf Amendment Bill
இஸ்லாம் மதத்தின் வக்ஃப் வாரிய சொத்துக்களை முறைப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக, வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு புதிய சட்டத்திருத்த மசோதா கடந்த 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டது.

புதிய சட்டத்திருத்த மசோதாவின்படி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வக்ஃப் சொத்துக்கள் மீதான வருவாய் விவரங்களை தெரிவிக்க வேண்டும், மாநில மற்றும் மத்திய வக்ஃப் வாரியங்களில் இஸ்லாமியர்கள் அல்லாத இரண்டு உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் சேர்க்கப்படுவார்கள், தணிக்கை அதிகாரம் மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு மாற்றம் செய்யப்படும் என்பன உள்ளிட்ட 44 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தநிலையில், ஏப்ரல் 1-ஆம் தேதி வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது 12 மணி நேரம் விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 288 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், 232 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனையடுத்து மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியது.
இதனை தொடர்ந்து ஏப்ரல் 2-ஆம் தேதி மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 128 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 95 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டதால் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
இந்தநிலையில், குடியரசு தலைவர் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் அரசிதழிலில் வெளியிட்டுள்ளது.
இதேவேளையில், வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி, அகில இந்திய மஜ்லீஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Waqf Amendment Bill