தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா படங்களை இணைத்து வெளியிட்ட போட்டோவுக்கு அக்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருந்தது. அப்போது தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்படும் என அதிமுக உறுதி அளித்தது.
ஆனால் அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலின் போது தேமுதிகவுக்கு ஒரு இடத்தை தர அதிமுக மறுத்துவிட்டது. இதனால் தேமுதிக கடும் அதிருப்தி அடைந்தது.
இதனையடுத்து தேமுதிகவுடன் திமுக தரப்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக, முதல்வர் ஸ்டாலினை தேமுதிகவின் பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி ஓய்வெடுத்த முதல்வர் ஸ்டாலின், திமுக கூட்டணித் தலைவர்களை சந்திக்கும் முன்னர் முதலில் தேமுதிகவினரை சந்தித்தது கவனம் பெற்றது. திமுக கூட்டணியில் தேமுதிகவும் இடம் பெறக் கூடும் என்பதை வெளிப்படுத்துவதாகவும் இந்த சந்திப்பு பேசுபொருளானது.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் பிரேமலதா விஜயகாந்த், சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சுற்றுப் பயணத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ஹோட்டல் ஹில்ஸில் தங்கி இருந்தது பிரேமலதா குடும்பம். அப்போது பிரேமலதா குடும்பத்தினரை கேசி வீரமணி சந்தித்து பேசினார். இதனால் தேமுதிகவை அதிமுக மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிப்பதும் தெரிய வந்தது.
இந்த பின்னணியில் இன்று ஆகஸ்ட் 11-ந் தேதி தேமுதிக பொருளாளரும் பிரேமலதாவின் சகோதரருமான எல்.கே. சுதீஷ், தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜெயலலிதா மற்றும் பிரேமலதா இருவரது படங்களை ஒன்றிணைத்து ஒரு போட்டோ பகிர்ந்துள்ளார். கேப்ஷன் எதுவும் இல்லாமல் சுதீஷ் இந்த போட்டோவை பகிர்ந்துள்ளார்.
எல்.கே.சுதீஷின் இந்த போட்டா பதிவுக்கு கீழே தேமுதிகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
அதில் சில கருத்துகள்:
Subash Subash:கூட்டணி உறுதி ஆகாத நிலையில் மற்ற கட்சி தலைவர்கள் புகைப்படத்தை இணைத்து போடுவதால் மீடியாவின் தவறான விமர்சனத்தை சந்திக்க நேரிடும்
Vijaya Sa Cee: வெட்ககேடு ஏ 1 குற்றவாளி படத்துடன் அண்ணியாரை போடுவது
VD Vinoth: தேவையில்லாத ஒன்று..!!
M G Rengaraj Dmdk: குற்றவாளி ஜெயலலிதா.அண்ணியார் சொக்க தங்கம்
Yogesh Dmdk: A1 குற்றவாளி. கூட்டணி முறிவு ஏற்பட்ட உடன் ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்து MLA க்களை விலைக்கு வாங்கியவர். நினைவு நாளில் அவருக்கு நாகரீகத்தோடு பதிவிடுங்கள் தவறில்லை இது தவறு. அரசியல் அறியாமை.
கேப்டன் ரமேஷ் ரமேஷ்:தயவு செய்து இந்த படத்தை நமது அண்ணியாருடன் போட வேண்டாம்.
