கோவை பீளமேடு பகுதியிலுள்ள தனியார் அரங்கில் இன்று (நவம்பர் 24) தேமுதிக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் பேசிய அவர் இந்த கூட்டம் மிகவும் முக்கியமான ஒன்று. அனைத்து தொகுதிகளிலும் உள்ளம் தேடி இல்லம் நாடி ரத யாத்திரை நடைபெறுகிறது. இன்று காலை காவல்துறையினர் கட்சி கொடிகளை எல்லாம் அகற்ற சொல்லி இடையூறுகளை ஏற்படுத்தியதாக கட்சியினர் கூறினார்கள். நான் போகும் இடமெல்லாம் தேமுதிகவிற்கு மக்களும் காவல்துறையினரும் பக்கபலமாக உள்ளார்கள். ஆனால் கோவையில் மட்டும் ஏன் இப்படி உள்ளது என்றார். மேலும் கோவை மாவட்டத்திற்கு யார் பொறுப்பாளர் என கேள்வி எழுப்பினார். அப்பொழுது அங்கிருந்த தொண்டர்கள் செந்தில் பாலாஜி என கோஷமிட்டனர். தேமுதிகவை பார்த்து பயப்படுகிறார்கள் என்றார்.
மெட்ரோ ரயில்
கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. நாம் ஜெயித்த பிறகு இது குறித்து பிரதமரை சந்திப்பேன். ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்று அறிவித்தால் அதன்படி செயல்படுத்த வேண்டும் துபாய்க்கு இணையாக மாற்ற வேண்டும் என தெரிவித்தார். தேர்தலுக்குப் பிறகு கோவை மற்றும் மதுரை மக்களுக்காக மெட்ரோ ரயில் திட்டம் குறித்து தேமுதிக குரல் கொடுக்கும் எனவும் தெரிவித்தார்.
மக்கள் புரட்சி
SIR குறித்துப் பேசிய அவர், வட நாடுகளில் இருந்து பல பேர் இங்கு வேலைக்கு வருகிறார்கள் எனவும் அவர்களுக்கெல்லாம் இங்கு ஓட்டுரிமை கொடுத்து தமிழர்களாக மாற்றுவதாக பல்வேறு தகவல்கள் வருகிறது.
SIR என்றால் வடமாநிலத்தில் இருந்து இங்கு வந்து பணிபுரிகிறீர்கள் என்றால் இங்கு வந்து பணிபுரியலாம் சம்பளம் வாங்கலாம் ஆனால் ஓட்டுரிமை என்பது அவர் அவர்கள் பிறந்த மாநிலத்தில் தான் இருக்க வேண்டும் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் தமிழர்களுக்கும், பல ஆண்டுகளாக இங்கு வசிப்பவர்களுக்கும் தான் ஓட்டுரிமை வழங்க வேண்டும் என கூறிய அவர் மக்களின் ஓட்டுகளை திருட வேண்டும் என்று நினைத்தால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்றார்.
மக்கள் நலன் கருதி கூட்டணி
வரும் ஜனவரி மாதம் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். தமிழக மக்களின் நலன் கருதி தான் கூட்டணி அமையும். இந்த முறை கூட்டணி ஆட்சி அமைவதற்கு சாத்தியங்கள் அதிகமாக உள்ளது. கூட்டணி மந்திரி சபை வரும்பொழுது அதிகாரம் அனைவருக்கும் பகிர்ந்து தரப்படும் போது மக்களின் நலனை நாங்கள் முன் நிறுத்துவோம். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் இதுவரை தமிழக அரசியலில் நாம் பார்க்காத தேர்தலாக அமையும்.
2026ல் தேர்தலில் 4 முனை போட்டி இருக்குமா என்ற கேள்விக்கு, சீமானை மட்டும் ஏன் விட்டு விட்டீர்கள். அவர் களத்தில் தானே இருக்கிறார் என்றார்.
வரும் தேர்தலில் தேமுதிக வகிக்கும் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் கூட்டணி மந்திரி சபை அமையும் என தெரிவித்தார். கூட்டணி மந்திரி சபை என்பது தமிழ்நாட்டில் இதுவரை பார்த்ததில்லை ஆனால் வட நாடுகளில் உள்ளது போல் தற்பொழுது தமிழகத்திற்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தார்.
