திமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதா? – பிரேமலதா விஜயகாந்த் பதில்

Published On:

| By Pandeeswari Gurusamy

தேமுதிகவைப் பொறுத்தவரை நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் வகையில் ஒரு தெளிவான சிந்தனையுடன் நல்ல முடிவை எடுப்போம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (ஜனவரி 24) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ADVERTISEMENT

அப்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இருதரப்பும் கூட்டணியை 90 சதவீதம் முடிவு செய்துவிட்ட நிலையில், தேமுதிகவின் கூட்டணி குறித்த எதிர்பார்ப்புடன் மக்கள் இருக்கும் நிலையில் தாமதம் ஏன் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,“தாமதம் என்பதெல்லாம் இல்லை. தேர்தல் தேதி அறிவித்து விட்டார்களா? யார் யார் எந்தத் தொகுதி என்று அறிவித்து விட்டார்களா? வேட்பாளர்கள் யார் என்பதை அறிவித்து விட்டார்களா? இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. செய்தியாளர்கள் தான் ரொம்ப ஆர்வமாக இருக்கிறீர்கள்.

பிப்ரவரி 20-க்குப் பிறகு தான் தேர்தல் தேதி அறிவிக்கப் போகிறார்கள். அதனால் நிறைய நேரம் இருக்கிறது. தேமுதிக எங்கள் குழந்தை. அவர்களுக்கு எப்போது என்ன நல்லது செய்ய வேண்டும் என்று ஒரு அம்மாவாக எனக்கு கடமைகள், பொறுப்புகள் இருக்கின்றன.

ADVERTISEMENT

அதனால் உரிய நேரத்தில் எல்லோரும் போற்றக்கூடிய ஒரு நல்ல கூட்டணி நிச்சயமாக அமைப்போம்” என்றார்.

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுவது குறித்த கேள்விக்கு,“எல்லா பக்கமும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஊடகங்கள் தினமும் ஒரு செய்தி வெளியிடுகின்றன. அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. நான் பலமுறை தெளிவாகச் சொல்லியுள்ளேன். உரிய நேரத்தில் நல்ல ஒரு முடிவெடுத்து நிச்சயமாக அறிவிப்போம்” என்றார்.

ADVERTISEMENT

கட்சியின் பொருளாளர் முக்கிய பிரமுகர் ஒருவரைச் சந்திக்கச் சென்றதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு,“ரகசியம் எதுவும் இல்லை. நாங்கள் வெளிப்படையாகத் தான் கூட்டணி அமைப்போம். நாங்கள் கூட்டணி குறித்து உறுதி செய்தால் முதலில் அழைத்து அறிவிப்பது உங்களிடம் தான்” என்றார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா என்ற கேள்விக்கு,“அதுவும் முடிவாகவில்லை. இன்னும் பல கட்சிகள் அங்கு சேர உள்ளதாகப் பேச்சுவார்த்தைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. எதுவும் இங்கு முடிவாகவில்லை. அதனால் எந்த நேரமும் எது வேண்டுமானாலும் மாறலாம். யார் வேண்டும் என்றாலும், எந்தக் கூட்டணிவேண்டுமானாலும் அமைக்கலாம். ஆனால் தேமுதிகவைப் பொறுத்தவரை நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் வகையில் ஒரு தெளிவான சிந்தனையுடன் நல்ல முடிவை நாங்கள் எடுப்போம்.

”தமிழ்நாடு ஆட்சி மாற்றத்திற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டதாக மோடி பேசியது குறித்த கேள்விக்கு,“எப்படி இருந்தாலும் எலக்சனுக்கு பிறகு ஒரு ஆட்சி வரத்தான் போகிறது. அது நல்ல ஆட்சியாக, மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஆட்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை.” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share