சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 19) முதல்வர் ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் சுதீஷ் உள்ளிட்டோர் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தனர்.
இதைத்தொடர்ந்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இன்றுதிராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் மட்டுமல்ல; திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அண்ணன் ஸ்டாலின் முதல் கிளைக் கழகத் தொண்டர்கள் வரை இந்தக் கூட்டணியை மிகச் சந்தோஷத்துடன் வரவேற்கிறார்கள். கூட்டணியில் இருக்கின்ற அத்தனை தோழமைக் கட்சிகளும் தேமுதிக வரவை மிக மிகச் சந்தோஷமாக வரவேற்று ஏற்றுக்கொண்டிருக்கின்றன. எனவே, 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதை உறுதியாக இந்த நேரத்தில் சொல்கிறேன். 200+ அமோக வெற்றி இந்தக் கூட்டணி பெறும் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்தில்லை.
கேப்டனும், கலைஞரும் பல ஆண்டுகளாக நட்பில் இருந்தவர்கள். எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தவரே கலைஞர் தான். அறிவாலயத்துக்குள் நான் போகும்போது எனக்குக் கேப்டன் நினைப்புதான் வந்தது. திருமணம் முடிந்து எங்கள் ரிசப்ஷன் நடந்ததும் அறிவாலயத்தில் தான். பல ஆண்டுகளாக அவர்கள் குடும்பமும் எங்கள் குடும்பமும் ரொம்ப நெருக்கமாகப் பழகியவர்கள் தான். ஆனால் அரசியல் என்று வந்த பிறகு கூட்டணி என்று வரும்போது எத்தனையோ முறை பேசப்பட்டாலும் அது நிறைவேறாமலேயே இருந்தது.
கலைஞர் கூட 2016-ல் “பழம் நழுவி பாலில் விழப்போகிறது” என்று சொன்னார். கேப்டனுக்கு விருப்பம் இருந்தது. ஆனால் அந்தக் கூட்டணியை அப்போது முடிவு செய்ய முடியவில்லை. இறுதியாக பத்து வருஷம் கழிந்து, பழம் நழுவி தேன் கலந்த பாலில் இந்த முறை விழுந்திருக்கிறது.
பலரின் கற்பனைகளுக்கும் தேமுதிக இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சட்டசபைத் தேர்தலில் நானும் போட்டியிடுவேன்.” என தெரிவித்தார்.
