தமிழக அரசின் பட்ஜெட்டை தேமுதிக வரவேற்பதாகவும், மாநில உரிமைகளுக்காக திமுகவுடன் இணைந்து குரல் கொடுப்போம் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். Premalatha Vijayakanth supports dmk
ராஜ்ய சபா சீட் தொடர்பாக அதிமுகவுடன் ஏற்பட்ட கசப்பு காரணமாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூட்டணி விவகாரத்தில் சில மாற்றங்களை வெளிப்படுத்தி இருந்தார்.
அதிமுகவுடன் தான் கூட்டணியில் இருக்கிறோம் என்று தொடர்ந்து செய்தியாளர்களிடம் அழுத்தமாக கூறி வந்த பிரேமலதா, “தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. இப்போதே கூட்டணி பற்றி கூற முடியாது” என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில், திமுக கூட்டணி கட்சிகளை கையாளுகிற பொறுப்பில் இருக்கும் அமைச்சர் எ.வ.வேலு தரப்பிலிருந்து தேமுதிகவிடம் பேசப்பட்டிருக்கிறது.
‘திமுக கூட்டணி இந்த நொடி வரைக்கும் மிக வலிமையாக இருக்கிறது. இதே நிலைதான் தொடரும். அதிமுகவில் பெரிய குழப்பங்கள் இருக்கின்றன. எனவே நீங்கள் திமுக கூட்டணிக்கு வந்து விடுங்கள்’ என்று தேமுதிக தலைமையில் உள்ள சிலருக்கு தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக, திமுக கூட்டணியில் இணையும் அதிமுக கூட்டணிக் கட்சி? என்ற தலைப்பில், கடந்த மார்ச் 11-ஆம் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த பின்னணியில் தான் திமுக பட்ஜெட்டை வரவேற்பதாகவும், மாநில உரிமைகளுக்காக திமுகவுடன் இணைந்து குரல் கொடுப்போம் என்றும் பிரேமலதா பேசியுள்ளார்.

பழனியில் நேற்று (மார்ச் 16) செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிகவை பொறுத்தவரை தமிழக பட்ஜெட்டை வரவேற்கிறோம். 2006-ஆம் ஆண்டு தேமுதிக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியான பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. அதற்காக தமிழக அரசுக்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.
விவசாயிகளை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லுதல், மெட்ரோ டிரெயின், உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, பெண்களுக்கான திட்டங்கள் என பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளார்கள். வேலைவாய்ப்பு தொடர்பாக இன்னும் சில திட்டங்களை அறிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதே எங்கள் கருத்து.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும். அன்னை மொழி காப்போம், அனைத்து மொழியும் கற்போம் என்பது தான் தேமுதிகவின் கொள்கை. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்திற்கான நாடாளுமன்ற எண்ணிக்கையை குறைத்தால் நிச்சயமாக மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசுடன் கைகோர்த்து தமிழகத்திற்காகவும் மக்களுக்காகவும் நாங்களும் உரிமையாக போராடுவோம்” என்றார்.
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், “பொத்தம் பொதுவாக எதையும் சொல்லக்கூடாது. அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட வேண்டும். ஏற்கனவே செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு பிறகு வெளியே வந்திருக்கிறார். எனவே, இதுகுறித்து அமலாக்கத்துறை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்” என்றார். Premalatha Vijayakanth supports dmk