தேமுதிகவுக்கு 6 சீட் ஒதுக்கப்படுவதாக தகவல் கொடுத்த கட்சிக்கு அழிவுகாலம் தொடங்கிவிட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம் பொங்க தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் திமுக, அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றன. ஏற்கனவேஅதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்களான பியூஸ் கோயல், அர்ஜுன் மெகாவால் ஆகியோர் கடந்த வாரம் சென்னை வந்தனர்.
அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது கூட்டணிக்கு வரவுள்ள புதிய கட்சிகள், மற்றும் கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் அதிமுகவிற்கு 170 தொகுதிகளும், பாஜகவிற்கு 25 தொகுதிகளும், பாமகவிற்கு 23 தொகுதிகளும் தேமுதிகவிற்கு ஆறு தொகுதிகளும் வழங்க வாய்ப்புகள் உள்ளது என்ற தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவலை அதிமுக மற்றும் பாஜக தரப்பினர் மறுத்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேமுதிக சார்பாக நடைபெற்ற விழாவில் அக்கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பியூஸ் கோயல், அர்ஜுன் மெகாவால் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த பிரேமலதா, அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் சேர்ந்து கலந்து ஆலோசித்து இருக்கிறார்கள். அதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பாஜக-அதிமுக இரண்டும் தான் தற்போது கூட்டணியாக உள்ளனர்.
அந்த கூட்டத்திற்கு பிறகு எந்தெந்த கட்சிகளுக்கு இத்தனை சீட் என்று யார் தகவல் கொடுத்தார்கள். அதிகாரப்பூர்வமாக அந்த லிஸ்ட்டை யார் கொடுத்தார்கள் என்று செய்தியாளர்கள் சொல்ல வேண்டும். அதன் பின்னர் நான் பதில் சொல்கின்றேன் என்றார். சமூக வலைதளம் மூலமாக வெளியான ஒரு செய்தியை வைத்து தொலைக்காட்சிகளில் விவாதம் செய்தவர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிகவிற்கு வெறும் ஆறு சீட் என தகவல் வெளியிட்ட அந்தக் கட்சிக்கு அழிவு காலம் ஆரம்பித்து விட்டது என்று ஆக்ரோஷமாக தெரிவித்தார். எங்கள் அனுமதி இல்லாமல் யாரும் பேசக்கூடாது. கடைக்கோடியில் உள்ள தொண்டர்களின் மனநிலை என்ன என்பதை யோசித்துப் பார்த்தீர்களா? என்றவர் வரும் ஜனவரி 9 ம் தேதி யாருடன் கூட்டணி என்பது குறித்து நான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்றும் தெரிவித்தார்.
